கயத்தாறு அருகே கோர விபத்து: பாலத்தில் கார் மோதி தாயுடன் சென்னை என்ஜினீயர் பலி


கயத்தாறு அருகே கோர விபத்து: பாலத்தில் கார் மோதி தாயுடன் சென்னை என்ஜினீயர் பலி
x

கயத்தாறு அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது பாலத்தில் கார் மோதி தாயுடன் என்ஜினீயர் பலியானார். தந்தை படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடி,

சென்னை அடையாறு கிரசன்ட் பார்க் தெருவைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது 70). இவரது மனைவி ரேணுகாதேவி (60). இவர்களுடைய மகன் செல்லத்துரை (35). இவர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவர்களது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் மாவடி பண்ணையை சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில் நவநீதகிருஷ்ணன் தனது மனைவி, மகனுடன் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் காரில் வந்தார்.

பாலத்தில் கார் மோதியது

நேற்று திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு மீண்டும் 3 பேரும் காரில் சென்னைக்கு புறப்பட்டனர். காரை செல்லத்துரை ஓட்டினார்.

மதியம் 2 மணி அளவில் கார் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நாற்கர சாலையில் உள்ள பாலத்தில் வந்து கொண்டு இருந்தது. அப்போது, திடீரென செல்லத்துரையின் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது. மேலும், நிற்காமல் தடுப்புச்சுவரை தாண்டி பள்ளத்தில் கவிழ்ந்து நின்றது.

தாய்-மகன் பலி

இந்த கோர விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காருக்குள் இருந்த செல்லத்துரை, அவரது தாய் ரேணுகாதேவி ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். நவநீதகிருஷ்ணன் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் நெடுஞ்சாலைத்துறை ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து, நவநீதகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

போலீசார் விசாரணை

மேலும், இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பலியான செல்லத்துரை, ரேணுகாதேவி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சோகம்

விபத்தில் பலியான செல்லத்துரைக்கு திருநிஷா என்ற மனைவியும், தஸ்வின் என்ற 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். திருநிஷாவை நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவந்ததால் அவர்கள் இந்த விபத்தில் சிக்காமல் உயிர்தப்பினர்.

திருமண வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது கார் விபத்துக்குள்ளானதில் தாயுடன் என்ஜினீயர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story