குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம்


அரிமளம் அருகே குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

மாட்டு வண்டி பந்தயம்

அரிமளம் அருகே உள்ள புதுநிலைப்பட்டி கிராமம் கண்ணுடைய அய்யனார், குறுந்துடைய அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு 9-ம் ஆண்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் புதுக்கோட்டை திருச்சி, தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, நடு மாடு, சிறிய மாடு என 3 பிரிவாக நடத்தப்பட்டது.

பெரிய மாடு பிரிவில் பந்தய தூரம் 8 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 14 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசு பேராவூரணி கழனிவாசல் லிங்கேஸ்வரன், 2-ம் பரிசு மாவூர் பாலு, 3-ம் பரிசு புதுநிலைப்பட்டி சீமான் கண்ணன், 4-ம் பரிசு புதுநிலைப்பட்டி பெரியசாமி ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன.

நடுமாடு பிரிவு

இதனை தொடர்ந்து நடைபெற்ற நடுமாடு பிரிவில் பந்தய தூரமானது 6 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 33 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயத்தில் மாட்டு வண்டிகள் அதிகம் கலந்து கொண்டதால் பந்தயம் 2 பிரிவாக நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசு புதுநிலைபட்டி சீமான் கண்ணன், சிவகங்கை அருண், 2-ம் பரிசு அப்பன் திருப்பதி ராகுல், ஏரியூர் பெத்தாச்சி, 3-ம் பரிசு அறந்தாங்கி ஆசிக், மருங்கூர் முகமது, 4-ம் பரிசு நெம்பலிக்காடு ஓம் உடைய அய்யனார், இடையன்காடு மலர் பரணி ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் பெற்றன.

சிறிய மாடு

தொடர்ந்து நடந்த சிறிய மாடு பிரிவில் பந்தய தூரம் 5 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டது. இதில் 47 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இந்த பிரிவில் அதிகளவு வண்டிகள் கலந்து கொண்டதால் பாதுகாப்பு கருதி 2 பிரிவாக நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசு பல்லவராயன்பட்டி இளமாறன், புதுநிலைப்பட்டி கண்ணையா குமார், 2-ம் பரிசு புதுநிலைப்பட்டி சீமான் கண்ணன், கே.புதுப்பட்டி கே.ஏ. அம்பாள், 3-ம் பரிசு பொய்யாத நல்லூர் கபீப் முகமது, கருவிடைசேரி சாத்தையா, 4-ம் பரிசு பேராவூரணி ருத்ரா அப்பாஸ், பட்டங்காடு பிரகதீஸ்வரன் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன.

குதிரை வண்டி

இதனை தொடர்ந்து நடைபெற்ற நடுக்குதிரை வண்டிகளுக்கான பந்தயத்தில் 12 குதிரைகள் கலந்து கொண்டன. இதன் பந்தய தூரம் போய் வர 9 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதில் முதல் பரிசு நாகப்பட்டினம் சீராப்பள்ளி அழகு மயில் துணை, 2-ம் பரிசு ராசிபுரம் பூண்டி மாதா, 3-ம் பரிசு பட்டுக்கோட்டை பாண்டி, 4-ம் பரிசு புதுநிலைப்பட்டி சீமான் கண்ணன் ஆகியோருக்கு சொந்தமான குதிரைகள் பெற்றன.

பரிசு

இதையடுத்து பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடு, குதிரை வண்டி உரிமையாளருக்கு ரொக்கம் மற்றும் மிக்சி, மின்விசிறி, கிரைண்டர், சண்டைசேவல், ஏர் கலப்பை, ஆடு உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற புதுநிலைப்பட்டி- கல்லூர் சாலை இருபுறமும் ஏராளமான மக்கள் திரண்டிருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை புதுநிலைப்பட்டி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.


Next Story