அய்யனார் கருப்பணசாமி கோவிலில் குதிரை எடுப்பு திருவிழா


அய்யனார் கருப்பணசாமி கோவிலில் குதிரை எடுப்பு திருவிழா
x

கீழக்குயில்குடியில் மலையடி அய்யனார் கருப்பணசாமி கோவில் திருவிழாவையொட்டி குதிரை எடுப்பு திருவிழா நாளை மறுநாள்(11-ந்தேதி) நடக்கிறது.

மதுரை

நாகமலைபுதுக்கோட்டை,

கீழக்குயில்குடியில் மலையடி அய்யனார் கருப்பணசாமி கோவில் திருவிழாவையொட்டி குதிரை எடுப்பு திருவிழா நாளை மறுநாள்(11-ந்தேதி) நடக்கிறது.

குதிரை எடுப்பு விழா

நாகமலைபுதுக்கோட்டையை அடுத்த கீழக்குயில்குடியில் ஸ்ரீமலையடி அய்யனார் கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி பொங்கல் விழாவை முன்னிட்டு சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு குதிரை(புரவி) எடுப்பு திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 3-ந் தேதி புரட்டாசி பொங்கல் விழா சாட்டுதல் நிகழ்வு நடந்தது. இதையடுத்து நாளை(செவ்வாய்க்கிழமை) சிறப்பு பூஜைகள், மாவிளக்கு எடுத்தல், சாமி வீதி உலா போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

நாளை மறுநாள் (11-ந்தேதி) விளாச்சேரியில் இருந்து கீழக்குயில்குடி வழியாக ஸ்ரீமலையடி அய்யனார் கருப்பணசாமி கோவிலுக்கு குதிரை எடுப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக விளாச்சேரி கிராமத்தில் மண்ணால் ஆன குதிரை சிலைகள் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

வர்ணம் தீட்டும் பணி

கோவில் பூசாரியும், ஸ்தபதியுமான முத்துக்குமார் தலைமையிலான குழுவினர் கடந்த ஒரு மாத காலமாக கருப்பணசாமி பட்டத்து குதிரை, 3 தேவர் குதிரைகள் மற்றும் நேர்த்திக்கடன் குதிரை சிலைகளை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது குதிரை சிலைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அவற்றுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகின்றன.

விழாவிற்கான ஏற்பாடுகளை கீழக்குயில்குடி கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story