'தி நீல்கிரிஸ் டெர்பி' கோப்பைக்கான குதிரைப் பந்தயம்-சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
ஊட்டியில் ‘தி நீல்கிரீஸ் டெர்பி' கோப்பைக்கான குதிரைப் பந்தயம் நடந்தது.
ஊட்டி
ஊட்டியில் 'தி நீல்கிரீஸ் டெர்பி' கோப்பைக்கான குதிரைப் பந்தயம் நடந்தது.
'தி நீல்கிரிஸ் டெர்பி' கோப்பை
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவார்கள். இவர்களை கவர்வதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கோடை சீசனின் முக்கிய நிகழ்வான குதிரை பந்தயம், ஊட்டியில் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் எப்ரல் மாதம் 14-ந் தேதி குதிரைப் பந்தயம் தொடங்கும். ஆனால் கடந்த ஆண்டு மழை காரணமாக பல்வேறு போட்டிகள் ரத்தானதால், இந்த ஆண்டுக்கான போட்டிகள் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கியது. ஊட்டியில் நடக்கும் குதிரை பந்தயங்களில் தி நீல்கிரிஸ் 1,000 மற்றும் 2,000 கின்னீஸ், நீலகிரி தங்க கோப்பை, தி நீல்கிரீஸ் டெர்பி ஆகியவை முக்கிய பந்தயங்களாகும்.
ரூ. 49 லட்சம் பரிசு
இதில் தி நீல்கிரிஸ் 1000 மற்றும் 2000 கீன்னீஸ் உள்ளிட்ட பந்தயங்கள் நடைபெற்று முடிந்தது. இந்தநிலையில் முக்கிய பந்தயங்களில் ஒன்றான 'தி நீல்கிரிஸ் டெர்பி' கிரேட்-1 குதிரைப் பந்தயம் நேற்று நடந்தது. இதில் 3 வயதுக்கு உட்பட்ட குதிரைகள் மட்டும் போட்டியில் கலந்து கொள்ளும். இந்த பந்தயத்துக்குக்கான மொத்த பரிசு தொகை ரூ.49 லட்சம் ஆகும்.
நீல்கிரிஸ் டெர்பி கோப்பைக்கான பந்தயத்தில் 1600 மீட்டர் தூரத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 9 குதிரைகள் பங்கேற்றன. இந்த பந்தயத்தில் சாய்குமார் என்ற ஜாக்கி ஓட்டிய சம்திங் ராயல் என்ற 8-ம் எண் குதிரை முதல் இடத்தை வெற்றி பெற்றது. பந்தய தூரத்தை 1 நிமிடம் 45 வினாடிகளில் ஓடி கடந்தது. இதன் உரிமையாளரான டாக்டர் முத்தையா குழுமத்திற்கு ரூ.30 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
இதேபோல் அக்சய் குமார் என்ற ஜாக்கி ஓட்டிய நாட்டி சார்மர் என்ற குதிரை 2-வது இடத்தையும், உமேஷ் ஒட்டிய டைம் அன்ட் டைட் என்ற குதிரை 3-வது இடத்தையும் பிடித்தது.
குதிரை பந்தயத்தை காண மைதானத்துக்குள் வருபவர்களுக்கு நுழைவு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்பட்டது. மேலும் பெங்களூரு, மும்பை, புனே, ஐதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆன்லைன் மூலம் நேரடியாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதை நேரிலும், ஆன்லைன் மூலமாகவும் ஏராளமானோர் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.