மருத்துவக் கழிவுகளை தீ வைத்து எரித்த ஆஸ்பத்திரிக்கு அபராதம்
நெல்லையில் மருத்துவக் கழிவுகளை தீ வைத்து எரித்த ஆஸ்பத்திரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நெல்லை மேலப்பாளையம் மண்டல பகுதிக்கு உட்பட்ட எஸ்.டி.சி. கல்லூரி ரோட்டில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் மருத்துவக்கழிவுகள் சுகாதாரமற்ற முறையில் சேகரிக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில் மாநகர் நல அலுவலர் சரோஜா தலைமையில் சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்தினர்.
ஆய்வில், அந்த ஆஸ்பத்திரியில் மருத்துவக்கழிவுகள் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே சேகரித்து வைக்கப்பட்டு துர்நாற்றம் வீசும் வகையிலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதனை எரியூட்டியதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த ஆஸ்பத்திரிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக மாநகராட்சி கமிஷனருக்கு ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆஸ்பத்திரிக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.