விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்


விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
x

மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை
ஆதி திராவிட மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விடுதிகள்

சிவகங்கை மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 7 கல்லூரி விடுதிகளும், 37 பள்ளி மாணவ, மாணவிகள் விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும் சேர்ந்து பயனடையலாம்.

இந்த விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். மாணவர்களை பொறுத்தவரை பள்ளிக்கும், வீட்டிற்கும் உள்ள தூரம் 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகள் மற்றும் பெற்றோரை இழந்த மாணவர்கள் பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கு இந்த நிபந்தனை பொருந்தாது.

விண்ணப்பிக்கலாம்

விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தரமான உணவு வழங்கப்படும். இதே போல பள்ளி விடுதிகளில் தங்கி படிப்பவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும். இந்த ஆண்டு முதல் விண்ணப்பங்களை https://tnadw.hms.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்ய வேண்டும். மேலும் புதிதாக பள்ளி விடுதிகளில் சேர விரும்புபவர்கள் வருகிற 20-ந் தேதி வரையிலும், கல்லூரி விடுதிகளில் சேர விரும்புபவர்கள் ஆகஸ்டு 5-ந் தேதி வரையிலும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே விடுதிகளில் தங்கி படிப்பவர்கள் இந்த ஆண்டு புதுப்பிக்க பள்ளி விடுதிகளுக்கு வருகிற 15-ந் தேதி வரையும், கல்லூரி விடுதிகளுக்கு வருகிற 25-ந் தேதி வரையும் இணையதளத்தில் பதிவு செய்யலாம். அத்துடன் அனைத்து விடுதிகளிலும் இலங்கை தமிழர்களின் குழந்தைகள் 5 பேர் சேர்த்து கொள்ளப்படுவார்கள்

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



Next Story