பணிபுரியும் மகளிருக்கான விடுதி கட்டிடம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்


பணிபுரியும் மகளிருக்கான விடுதி கட்டிடம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
x

பணிபுரியும் மகளிருக்கான விடுதி கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திருச்சி

மகளிர் விடுதி

தமிழ்நாட்டில் பெரும்பாலான பெண்கள் சிறுநகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து பணி நிமித்தமாக தங்களது வீட்டைவிட்டு வெளியே தங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் குறைந்த வாடகையில் பணிபுரியும் இடத்துக்கு அருகாமையில் தரமான பாதுகாப்பான தங்கும் விடுதிகள் மிகவும் அவசியமான தேவையாக உள்ளது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்காக மகளிர் விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் அமைத்து செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகளை உருவாக்கவும், செயல்பட்டு வரும் விடுதிகளை புதுப்பிக்கவும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற அமைப்பை அமைத்துள்ளது. இதன் மூலம் திருச்சி ஹீபர்சாலையில் ரூ.5.63 கோடி மதிப்பில், பணிபுரியும் மகளிர் விடுதி கட்டி முடிக்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

இந்த விடுதியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். இந்த விடுதியில் 106 படுக்கை வசதியுடன் 2 பேர் அல்லது 4 பேர் தங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 24 மணிநேர பாதுகாப்பு வசதி, இலவச வைபை, பயோமெட்ரிக், பொழுதுபோக்கு அறை ஆகிய நவீன வசதிகள் செய்யப்பட உள்ளன.

மேலும் www.tn.whc.in என்ற இணையதளம் வாயிலாக படுக்கை அறைகள் இருப்புத்தன்மை அறிந்து தேவைக்கேற்ப முன்பதிவு செய்து கட்டணம் செலுத்திடும் முறை அறிமுகம் செய்யப்பட்டு, பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியினை சொந்த இடங்களை விட்டு வெளியூர்களில் தங்கி பணிபுரியும் அனைத்து மகளிரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வருடங்கள், மாதங்கள் மட்டுமின்றி வாரங்கள், ஓரிருநாட்கள் கூட மகளிர் இந்த விடுதியில் தங்கிட வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், மாவட்ட சமூகநல அலுவலர் நித்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story