ஓசூரில், பருவமழைக்கு வாய்ப்பு:திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற விவசாயிகள் கோரிக்கை


ஓசூரில், பருவமழைக்கு வாய்ப்பு:திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 19 Jun 2023 12:30 AM IST (Updated: 19 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூரில் பருவமழைக்கு வாய்ப்பு காரணமாக திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல் மூட்டைகள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ரெயில்கள், லாரிகள் கொண்டு வரப்பட்ட மற்றும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட 8 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தளி சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான காலி இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நெல் மூட்டைகள் எந்தவித பாதுகாப்பும் இன்றி திறந்த வெளியில் குவியல், குவியலாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள மூட்டைகளில் இருந்து நெல்மணிகள் குவியல், குவியலாக கீழே கொட்டி சிதறி கிடக்கின்றன.

இழப்பு

இதனால் விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு கீழே கொட்டி கிடப்பதாலும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவதாலும் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், நெல் மூட்டைகளின் மீது காற்று படவேண்டும் என்பதால் காலை நேரங்களில் மூட்டைகளை மூடாமலும், மீண்டும் மாலையில் பெரிய, பெரிய தார்ப்பாய்களை கொண்டு பாதுகாப்பாக மூடி வருகிறோம்.

இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்குள் அனைத்து நெல் மூட்டைகளையும் அங்கிருந்து கொண்டு சென்று மாவட்டத்தில் உள்ள 63 அரவை மில்களுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பின்னர் அரவை மில்களில் அரிசியாக தயாரித்தும், பாலீஷ் செய்தும் மாவட்டத்தில் உள்ள 5 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என்றார்.


Next Story