ஓசூர் மாநகராட்சி 1-வது மண்டல குழு கூட்டம்
ஓசூர் மாநகராட்சி 1-வது மண்டல குழு கூட்டம் நடந்தது.
ஓசூர்:-
ஓசூர் மாநகராட்சி 1-வது மண்டல குழு கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. மண்டல தலைவர் அரசனட்டி ரவி தலைமை தாங்கினார். ஆணையாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில் குழு உறுப்பினர்கள் எம்.அசோகா, எச்.ஸ்ரீதரன், ரஜினிகாந்த், சீனிவாசலு, கிருஷ்ணப்பா, மாரக்கா, மம்தா ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் வார்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி பேசினர்.
தொடர்ந்து பேசிய ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி பகுதிகளில் 439 பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஓசூர் மாநகராட்சி அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான தெரு பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே குடிநீர் வாரியம் மற்றும் மின்வாரியத்திற்கு முறையாக மாதந்தோறும் தவறாமல் கட்டணம் செலுத்தி வரும் மாநகராட்சிகளில் ஓசூரும் ஒன்று என்று குறிப்பிட்டார். ஓசூரில் சாலைகள் மிகவும் மோசம் என்ற தோற்றம் உருவாகி வருகிறது, இதற்கு தனி கவனம் செலுத்தி உடனுக்குடன் சீரமைத்து குண்டும் குழியுமாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும், அவசரமான பணிகளை முடித்து தர வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் நகர் நல அலுவலர் அஜிதா, நகரமைப்பு அலுவலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வைக்கப்பட்ட 24 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.