வெள்ளக்காடாக மாறிய ஓசூர்


ஓசூர் விடிய, விடிய பெய்த கனமழையால் வெள்ளக்காடாக மாறியது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

கிருஷ்ணகிரி

ஓசூர்

விடிய, விடிய கனமழை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று முன்தினம் இரவு லேசாக மழை பெய்ய தொடங்கி, நேரம் செல்ல, செல்ல கனமழை தீவிரம் அடைந்தது. விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. ஓசூரில் மட்டும் 72 மில்லி மீட்டர் மழை பதிவானது.

இந்த நிலையில், நகர் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் மிகவும் அவதியடைந்தனர். குறிப்பாக ஓசூர் 6-வது வார்டுக்குட்பட்ட கே.சி.சி.நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர், கழிவுநீருடன் கலந்து புகுந்தது.

இதனால் அப்பகுதி இரவு முழுவதும் துர்நாற்றம் வீசிய தண்ணீரால் மக்கள் அவதிப்பட்டனர். மேலும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீடுகளில் முடங்கினர். மேலும் அவர்கள் வீட்டின் மொட்டை மாடிகளில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதுதவிர அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தை வெள்ளநீர் மூழ்கடித்ததால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். இதனால் நேற்று காலையில் தொழிற்சாலைகள், அலுவலகங்களுக்கு செல்பவர்களும், பள்ளி குழந்தைகளும் மிகவும் அவதிப்பட்டனர்.

மாநகராட்சி மேயர், ஆணையாளர்

இதையடுத்து ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அலுவலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று தீயணைப்பு துறை வீரர்கள் ஒத்துழைப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

வெள்ளநீர் சூழ்ந்த மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட கே.சி.சி.நகர், பசுமை நகர், குறிஞ்சி நகர், சமத்துவபுரம், மஞ்சுநாதா லேஅவுட் ஆகிய பகுதிகளுக்கு மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா நேரில் சென்று ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை முடுக்கி விட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த அடைப்புகளை சரி செய்து தேங்கி நிற்கும் மழைநீரை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். அப்போது, துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

ஆபத்தான பகுதி

ஓசூரிலேயே மிகவும் ஆபத்தான பகுதியாக கே.சி.சி. நகர் விளங்குகிறது. தெற்கே தர்கா ஏரியில் இருந்து வரும் வெள்ளநீரும், மேற்கே டைட்டான், ஆனந்த் நகர், சின்ன எலசகிரி, காமராஜர் நகர், பாலாஜி நகர் பகுதிகளில் இருந்து வரும் வெள்ள நீரும் இங்கு தான் சங்கமிக்கிறது. மேலும் வடக்கே அத்திப்பள்ளி சர்ஜாபுரா ரோட்டில் உள்ள பிதரகுப்பே ஏரியில் தொடங்கி ஜூஜூவாடி, பேகேபள்ளி, நல்லூர், நல்லூர் அக்ரஹாரம், பேடரபள்ளி, சாந்தபுரம் ஆகிய ஏரிகளில் இருந்து வரும் அனைத்து வெள்ளநீரும் இந்த பகுதியில் தான் கலக்கிறது.

மழைகாலத்தில் வெள்ள நீர் வரும் போது கே.சி.சி. நகர் தெருக்களில் அனைத்து விதமான விஷ ஜந்துக்களும் தாராளமாக வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இந்த தாழ்வான பகுதியில், முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளை அப்புறப்படுத்தி கான்கிரீட் தடுப்புச்சுவரை அமைத்தால் தான் இப்பகுதி மக்கள் அச்சமின்றி வாழ முடியும் என்பதே இப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.

கே.சி.சி.நகர் பகுதி மட்டுமின்றி மாநகரப்பகுதியின் பல்வேறு இடங்களில் கனமழையால் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டும், குளம்போல் மழைநீர் தேங்கி நின்றுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிப்படைந்தனர்.

ஓசூர் சின்னாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, சமத்துவபுரம் அருகே 3 தனியார் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் அந்த குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் நேற்று முன்தினம் இரவு முதல் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். மேலும் குடியிருப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட கார்கள், 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கின. வெள்ள நீர் சூழ்ந்து, வெளியே வர முடியாமல் வீடுகளில் முடங்கியிருந்த மக்களை, தீயணைப்பு படையினர் ரப்பர் படகுகளில் சென்று மீட்டனர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்த ஓசூர் தாசில்தார் கவாஸ்கர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் படகில் சென்று, குழந்தைகள், முதியோர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை மீட்டு பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தனர். குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்திருப்பதால், அப்பகுதியில் மருத்துவத் துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் அங்கு முகாமிட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story