சங்கராபுரத்தை சேர்ந்த 2 பேர் குறித்த உருக்கமான தகவல்கள்
துபாயில் நடந்த தீ விபத்தில் சங்கராபுரத்தை சேர்ந்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்த உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
சங்கராபுரம்,
துபாயில் பிரிஜ் முரார் என்ற இடத்தில் 5 மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியர்கள் உள்பட பிற நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ, அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இந்த தீ விபத்தில் 4 இந்தியர்கள் உள்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இதில் உயிரிழந்த இந்தியர்களில் 2 பேர் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே ராமராஜபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சாலி குண்டு மகன் கூடு என்கிற முகமது ரபிக் (வயது 45), சங்கராபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த அப்துல் காதர் மகன் இமாம்காசீம் (36) என்பது தெரிய வந்துள்ளது.
நீண்ட நேரம் நீடிக்காத மகிழ்ச்சி
இவர்கள் 2 பேர் பற்றிய உருக்கமான தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது. முகமது ரபிக் கடந்த 15 ஆண்டுகளாக தீ விபத்து நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு நூர்னிஷாபர்கத் (32) என்கிற மனைவியும், ஜாஸ்மின் (12), அம்ரின் (10) என்கிற 2 மகள்களும், முகமது யூனிஸ் (8) என்கிற மகனும் உள்ளனர்.
முகமது ரபிக் குடும்பத்தினர் ராமராஜபுரத்தில் வசித்து வருகின்றனர். முகமது ரபிக் அவ்வப்போது தனது குடும்பத்தினருடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.
இந்த நிலையில் தீ விபத்து நடந்த அன்று காலையில் பேசியுள்ளார். அப்போது ரம்ஜான் பண்டிகை முடிந்தவுடன் ஊருக்கு வருவதாக அவர் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வந்தனர். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் பேசி முடித்த சில மணி நேரங்களில் நடந்த தீ விபத்தில் முகமது ரபிக் சிக்கி உயிரிழந்தார். இதை அறிந்த அவரது குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர்.
பெயிண்டர்
இதேபோல் இமாம்காசீம் கடந்த 18 ஆண்டுகளாக துபாயில் பணிபுரிந்து வந்தார். இதில் கடந்த 4 ஆண்டுகளாக தீ விபத்து நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் அவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு பல்கீஸ் (35) என்கிற மனைவியும், இம்ரானா (11), இமானா ஆகிய 2 மகள்களும், இம்ரான் (6) என்கிற மகனும் உள்ளனர். இமாம்காசீமும், தீ விபத்து நடந்த அன்று குடும்பத்தினரிடம் செல்போனில் பேசினார். அப்போது, பிறந்து 3 மாதம் ஆன தனது மகள் இமானாவை பார்க்க விரைவில் ஊருக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நான் அங்கு இல்லையென்றாலும், பிள்ளைகளை கவனமாக பார்த்து கொள்ளுமாறு மனைவியிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் அவரும் தீ விபத்தில் இறந்தார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். துபாயில் இறந்த 2 பேரின் உடல்களும் நாளை இந்தியாவிற்கு வரவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதால், உடல்களை வாங்க உறவினர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர்.
ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் துபாயில் நடந்த தீ விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மு.க.ஸ்டாலின் இரங்கல்
இதற்கிடையே இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ராமராஜபுரம் கிராமத்தை சேர்ந்த பெ.அப்துல் காதர் என்பவரின் மகன் இமாம் காசீம் (வயது 43) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பெ.சலியாகுண்டு என்பவரின் மகன் முகமது ரபிக் (49) ஆகிய 2 பேரும் கடந்த 15-ந்தேதியன்று, அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
ரூ.10 லட்சம் நிவாரணம்
உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்கு இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தானை இந்த பணியில் துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.