தாபா ஓட்டலில் 3 கிலோ தரமற்ற இறைச்சி பறிமுதல்உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
நாமக்கல்- பரமத்தி சாலையில் செந்தில்குமார் என்பவர் தாபா ஓட்டல் நடத்தி வருகிறார். இங்கு சீனிவாசன் என்பவர் நண்பர்களுடன் சாப்பிட சென்றார். அவர்கள் அங்கு சிக்கன் 'லாலிபாப்' வாங்கி உள்ளனர். அதனை சாப்பிட முற்பட்டபோது அது தரமற்ற நிலையில் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் உணவகத்தின் உரிமையாளரிடம் இதுகுறித்து கேட்டு உள்ளனர். ஆனால் அவர் சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று நாமக்கல் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கிருஷ்ணமூர்த்தி சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு நடத்தினார். அப்போது குளிர்சாதன பெட்டியில் சமைத்த கோழி இறைச்சி 3 கிலோ தரமற்ற நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதை கைப்பற்றி பினாயில் ஊற்றி அழித்தார். மேலும் சில குறைபாடுகளை கண்டறிந்த அவர், அதை சரிசெய்ய ஓட்டல் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினார்.