ஓட்டல் ஊழியருக்கு 10 ஆண்டு சிறை


ஓட்டல் ஊழியருக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 16 Oct 2023 6:45 PM GMT (Updated: 16 Oct 2023 6:45 PM GMT)

மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற ஓட்டல் ஊழியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

கன்னியாகுமரி

தூத்துக்குடி மாவட்டம் அழகியநாயகிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கொம்பன் (வயது 46). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பேச்சியம்மாள் (40). இவர்களுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

இந்தநிலையில் பேச்சியம்மாள் நடத்தையில் கணவர் கொம்பனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர்.

இதற்கிடையே 14 வயதுடைய மகனை நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்க வைத்து கொம்பன் படிக்க ஏற்பாடு செய்தார். அந்த சமயத்தில் மகனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை கேள்விபட்ட பேச்சியம்மாள் கடந்த 16-10-2012 அன்று அவரை பார்க்க பள்ளிக்கு வந்தார்.

மேலும் கொம்பனும் ஒரு ஆட்டோவில் அங்கு வந்தார். இந்தநிலையில் பள்ளி வளாகத்தில் வைத்து கணவன், மனைவி இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. இதில் ஆத்திரம் அடைந்த கொம்பன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பேச்சியம்மாளை சரமாரியாக குத்தி விட்டு தப்பி விட்டார். மகன் கண் முன்னே இந்த பயங்கர சம்பவம் நடந்தது.

கத்திக்குத்தில் காயமடைந்த பேச்சியம்மாள் உயிருக்கு போராடினார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நேசமணி நகர் போலீசார் கொம்பன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுதாகர் நேற்று கொம்பனை குற்றவாளி என தீர்ப்பு கூறினார்.

அதில் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் லிவிங்ஸ்டன் ஆஜரானார்.


Next Story