கோவில் வளாகத்தில் ஓட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
திருச்சி அருகே, நியாயம் இல்லை, நீதி இல்லை என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு கோவில் வளாகத்தில் ஓட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி அருகே, நியாயம் இல்லை, நீதி இல்லை என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு கோவில் வளாகத்தில் ஓட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாழ பிடிக்கவில்லை
திருச்சி மாவட்டம் வளநாட்டை அடுத்த கோவில்பட்டி அருகே முப்புளியான் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் 47 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைகண்ட அப்பகுதி மக்கள் வளநாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் குதிரைகுத்திப்பட்டியை சேர்ந்த செல்லத்துரை (வயது 47) என தெரியவந்தது. மேலும் அவர் எழுதி வைத்த கடிதம் சிக்கியது. அதில் நீதி இல்லை, நியாயம் இல்லை. இந்த முப்புளியான் சாமியை கும்பிட்டும், எங்கள் குலம் அழிந்தது. ஆகையால் எனக்கு வாழ பிடிக்கவில்லை. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.
மன வருத்தம்
இதையடுத்து இறந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த செல்லத்துரை ஓட்டல் நடத்தி வந்தார். அப்போது, ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்ததாக கூறி அவரது ஓட்டல் இடித்து அகற்றப்பட்டது. அதுமட்டுமின்றி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு செல்லத்துரையின் மகன் இறந்து விட்டார். அன்றில் இருந்து மனவருத்தத்தில் இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.