ரெயில் மோதி ஓட்டல் ஊழியர் பலி
கிணத்துக்கடவு அருகே பாட்டு கேட்டுக்கொண்டு தண்டவாளத்தில் நடந்து சென்ற ஓட்டல் ஊழியர் ரெயில் மோதி பரிதாபமாக இறந்தார்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே பாட்டு கேட்டுக்கொண்டு தண்டவாளத்தில் நடந்து சென்ற ஓட்டல் ஊழியர் ரெயில் மோதி பரிதாபமாக இறந்தார்.
ரெயில் மோதி பலி
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 40). இவர் கிணத்துக்கடவை அடுத்த முள்ளுப்பாடி ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலை செல்போனில் ஹெட்செட் மூலம் பாட்டு கேட்டுக்கொண்டு முள்ளப்பாடி கிராமம் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அந்த நேரம் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த ரெயில் கார்த்திக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போத்தனூர் ரெயில்வே போலீசார், கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் எச்சரிக்கை
இந்த சம்பவம் குறித்து போத்தனூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் கூறுகையில், கோவை-பொள்ளாச்சி இடையே உள்ள அகல ரெயில் பாதையில் யாரும் நடந்து செல்லக்கூடாது என பலமுறை அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் சிலர் தண்டவாள பகுதியில் நடந்து சென்று வருகின்றனர். இதில் ஒருசிலர் தங்களது அஜாக்கிரதையால் உயிரை இழந்து வருகின்றனர். எனவே ரெயில்வே தண்டவாளத்தில் யாரும் நடந்து செல்லக்கூடாது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.