நாகர்கோவிலில் ஓட்டல், டீக்கடைகளை உரிமம் பெற்று நடத்த வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் மேயர் மகேஷ் அறிவுரை


நாகர்கோவிலில் ஓட்டல், டீக்கடைகளை உரிமம் பெற்று நடத்த வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் மேயர் மகேஷ் அறிவுரை
x

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளை உரிமம் பெற்று நடத்த வேண்டும் என்று ஓட்டல்- டீக்கடைகள் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் மேயர் மகேஷ் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளை உரிமம் பெற்று நடத்த வேண்டும் என்று ஓட்டல்- டீக்கடைகள் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் மேயர் மகேஷ் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

நாகர்கோவில் பகுதியில் உள்ள ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் டீக்கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் மேயர் மகேஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள ஒரு சில ஓட்டலில் உணவு தயாரிக்கும் முறை வேதனை அளிப்பதாக உள்ளது. தெருக்கள் மற்றும் சாலைகளில் உணவு பொருட்கள் மற்றும் பலகாரங்கள் தயாரிக்கப்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.

உரிமம் பெற்று கொள்ள வேண்டும்

நள்ளிரவு நேரங்களில் ஓட்டல்களில் உள்ள கழிவு பொருட்கள் ரோடுகளில் கொட்டப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் ஏராளமான டீக்கடைகள் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. அனைத்து ஓட்டல்கள், டீக்கடைகளிலும் மாநகராட்சியில் தொழில் வரி, சொத்து வரி செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கும் கால அவகாசம் அளிக்கப்படும். உரிமம் பெறாத டீக்கடைகள், ஓட்டல்கள் மீது இனிவரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்களை கட்டாயம் பொருத்த வேண்டும். மாநகராட்சியால் விதிக்கப்பட்டுள்ள 12 நிபந்தனைகளை ஓட்டல் உரிமையாளர்கள், டீக்கடைகளின் உரிமையாளர்கள் செயல்படுத்த வேண்டும். அதற்கு கால அவகாசமும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மண்டல தலைவர்கள் செல்வக்குமார், ஜவகர், மாநகராட்சி கவுன்சிலர் அக்சயா கண்ணன், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்குமார், மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி குமார பாண்டியன், மாநகர நல அதிகாரி (பொறுப்பு) ஜான், மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி விமலா, ஆய்வாளர் கெபின்ஜாய், சுகாதார ஆய்வாளர்கள் மாதவன் பிள்ளை, பகவதி பெருமாள், ராஜேஷ், தியாகராஜன், சத்தியராஜ், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story