தரைத்தளத்தில் வீடு ஒதுக்க வேண்டும்
அடுக்குமாடி குடியிருப்பில் தரைத்தளத்தில் வீடு ஒதுக்க வேண்டும்
திருப்பூர்
திருப்பூரை சேர்ந்தவர் மணிமாறன். பனியன் நிறுவனத்தில் கட்டிங் மாஸ்டர். இவருடைய மகள் பிரியா (வயது 22). இவர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தபோது கடந்த 2016-ம் ஆண்டு தனியார் பஸ் மோதிய விபத்தில் காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று பின்னர் மெதுவாக நடந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை பிரியா, ஆம்புலன்சு வாகனத்தில் வந்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அதில், 'எனக்கு தாயார் இல்லை. தந்தை மட்டுமே உள்ளார். எங்களுக்கு வீரபாண்டி வஞ்சிநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது மாடியில் அரசு சார்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 மாதமாக அங்கு குடியிருந்து வருகிறோம். மாடிப்படியில் ஏறி இறங்குவதால் எனக்கு கால்வலி அதிகமாகி வீக்கம் ஏற்பட்டது. பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் எனது காலில் 2 அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எங்களுக்கு தரைத்தளத்தில் வீடு ஒதுக்கீடு செய்து உதவ வேண்டும். அதுபோல் விபத்து இழப்பீடு தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. விரைந்து வழக்கை முடித்து எனக்கு இழப்பீடு பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.