வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு
பொள்ளாச்சியில் வீடு புகுந்து 4 பவுன் நகையை திருடியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் வீடு புகுந்து 4 பவுன் நகையை திருடியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கதவு உடைப்பு
பொள்ளாச்சி வி.கே.வி. லே அவுட்டை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 44). இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மருந்து தொடர்பான தொழில் செய்து வருகிறார். மாதத்திற்கு இரு முறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி கடந்த 1-ந்தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் திருவனந்தபுரத்திற்கு சென்றதாக தெரிகிறது.
இதற்கிடையில் வீட்டை சுத்தம் செய்வதற்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அருகில் வசிக்கும் விக்னேஷின் உறவினர் வீட்டில் தெரிவித்து உள்ளார். அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததாக கூறப்படுகிறது.
நகை திருட்டு
இதையடுத்து திருவனந்தபுரத்தில் இருந்து விக்னேஷ் வந்து பார்த்த போது பீரோவில் இருந்த 4 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிந்திருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.