திடீரென்று வீடு இடிந்து விழுந்தது; மூதாட்டி உள்பட 5 பேர் உயிர் தப்பினர்


திடீரென்று வீடு இடிந்து விழுந்தது; மூதாட்டி உள்பட 5 பேர் உயிர் தப்பினர்
x

திண்டுக்கல்லில் இன்று அதிகாலையில் திடீரென்று வீடு இடிந்து விழுந்தது. மூதாட்டி உள்பட 5 பேர் உயிர் தப்பினர்

திண்டுக்கல்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சென்னமநாயக்கன்பட்டியில் பாலக்குட்டை லயன்ஸ்காலனியை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 60). இவர் தனது மகன் முருகன், மருமகள் மற்றும் 2 பேரக்குழந்தைகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அங்குள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் வீட்டு அருகே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வீட்டின் சுவர் ஈரமாக இருந்தது.

இதற்கிடையே நேற்று இரவு மூதாட்டி உள்பட 5 பேரும் வீட்டின் பின்அறையில் தூங்கினர். இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் டமார் என பயங்கர சத்தம் கேட்டது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அனைவரும் அலறியடித்து கொண்டு எழுந்தனர். அப்போது வீட்டின் மற்றொரு அறை இடிந்து விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நல்லவேளையாக அவர்கள் தூங்கிய அறைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அதேநேரம் வீட்டின் சுவர் விழுந்ததில் மாட்டு கொட்டகை சேதம் அடைந்தது. கொட்டகையில் கட்டி இருந்த கன்றுக்குட்டி காயம் அடைந்தது. இதனால் அவர்கள் அச்சத்தில் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி, காலை வரை வீட்டின் வெளியே அமர்ந்து இருந்தனர். இந்த வீட்டின் அருகே மாணவிகள் விடுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story