வீட்டில் தீ விபத்து


வீட்டில் தீ விபத்து
x

ஓசூர் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் கருகி இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் அருகே குமுதேப்பள்ளியில் விக்னேஷ்நகர் பகுதியில் வசித்து வருபவர் அம்பிகா (வயது 37). கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவருடன், அவருடைய தந்தை கிருஷ்ணப்பாவும் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அம்பிகா, திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள சொந்த ஊரான திருப்பத்தூருக்கு சென்றார். அவரது தந்தை கிருஷ்ணப்பா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

நேற்று அதிகாலை அம்பிகாவின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் இருந்த கிருஷ்ணப்பாவின் அலறல் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். தீ அதிக அளவு பரவியதால் ஓசூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அட்கோ போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்தனர்.

பரிதாப சாவு

தீயணைப்புத்துறையினர் வீட்டின் கதவை உடைத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது கிருஷ்ணப்பா தீயில் கருகி பரிதாபமாக இறந்து கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தீ விபத்தில் வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் வீடு முற்றிலும் சேதம் அடைந்தது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

1 More update

Next Story