ஆதிதிராவிட மக்கள் வீடுகளுக்கு வரி விதிக்க மறுப்பு


ஆதிதிராவிட மக்கள் வீடுகளுக்கு வரி விதிக்க மறுப்பு
x

ஆதிதிராவிட மக்கள் வீடுகளுக்கு வரி விதிக்க மறுப்பு

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் அருகே அலகுமலையில் ஆதிதிராவிட மக்களின் வீடுகளுக்கு வீட்டுவரி விதிக்க மறுப்பதுடன் குடிநீர் இணைப்பும் ஊராட்சி நிர்வாகம் வழங்கவில்லை என்று கூறி அப்பகுதியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

வீட்டுவரி விதிக்க மறுப்பு

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அலகுமலை ஊராட்சி மாதேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த மக்கள் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பழனிசாமி தலைமையில் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு அரசு, நிலத்தை விலைக்கு வாங்கி இடம் இல்லாத எங்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்து பட்டா வழங்கப்பட்டது. ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த நாங்கள் வீடு கட்டியும், சிலர் குடிசையிலும் வசித்து வருகிறோம். எங்கள் வீடுகளுக்கு வீட்டு வரி, வீட்டு எண், குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கிடைக்கவில்லை.

குடிநீர் இணைப்பு

நாங்கள் வீட்டுவரி கட்ட சென்றால் வாங்க மறுக்கிறார்கள். மாவட்ட ஊராட்சி நிதி மூலமாக எங்கள் பகுதியில் ஆழ்குழாய் கிணறு மற்றும் மோட்டார் அமைத்து தொட்டி மூலமாக தண்ணீர் வழங்கப்படுகிறது. பிரதமரின் ஜல்ஜீவன் திட்டத்தில் அலகுமலை ஊராட்சியில் அலகுமலை குக்கிராமம் சேர்க்கப்பட்டும் எங்கள் பகுதிக்கு பயன் கிடைக்காமல் செய்து விட்டார்கள். அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நாங்கள் வீடு கட்ட விண்ணப்பித்தபோதும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அரசின் நிலம் பெற்ற எங்களுக்கு பட்டா வழங்கி குடிநீர் இணைப்பு, வீட்டுவரி கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.




Next Story