டாக்டர் வீட்டின் பீரோவை உடைத்து ரூ.95 ஆயிரம் திருட்டு
பல்லடத்தில் பல் டாக்டர் வீட்டில் பீேராவை உடைத்து ரூ.95 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பல் டாக்டர்
சென்னையை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது46), பல் டாக்டர். இவர் பல்லடத்தில் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்தநிலையில் மாணிக்கபுரம் சாலை பாரதிபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனியே வசித்து வருகிறார்.
கடந்த 18-ந்தேதி சென்னைக்கு சென்று தனது குடும்பத்தினருடன் இருந்துவிட்டு நேற்று பல்லடத்திற்கு திரும்பினார். தனது வீட்டிற்கு வந்த நிலையில் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த துணிகள் கலைந்து கிடந்துள்ளது.
ரூ.95 ஆயிரம் திருட்டு
இதையடுத்து பல்லடம் போலீசாருக்கு அவர் தகவல் அளித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பல் மருத்துவர் பிரபாகரன் பீரோவில் வைத்திருந்த ரூ.95 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பீரோ மற்றும் கதவு ஆகிய இடங்களில் பதிவாகி இருந்த மர்ம ஆசாமிகளின் கை ரேகைகளை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.