டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக 21 ஆயிரம் கள பணியாளர்கள் மூலம் வீடு வீடாக கொசு ஒழிப்பு பணி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக 21 ஆயிரம் கள பணியாளர்கள் மூலம் வீடு வீடாக கொசு ஒழிப்பு பணி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

‘டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக 21 ஆயிரம் கள பணியாளர்கள் மூலம் வீடு வீடாக கொசு ஒழிப்பு பணி' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்

சென்னை

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குனரகத்தில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குனர் டாக்டர் ச.உமா, பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் சண்முக்கனி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்புளூயன்சா மற்றும் கொரோனா போன்ற நோய்களின் பாதிப்பு தற்போது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அத்தகைய தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தும் வகையிலும், டெங்கு காய்ச்சல் குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நாடு முழுவதும் தேசிய டெங்கு தடுப்பு தினம் இன்று (நேற்று) கடைப்பிடிக்கப்படுகிறது.

தமிழகமெங்கும் தினமும் காய்ச்சல் கண்காணிப்பு பணி 2,800 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் குறிப்பிட்ட தனியார் ஆஸ்பத்திரிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆரம்ப சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையில் வட்டார அளவிலான துரித செயல்பாட்டுக் குழுக்கள் காய்ச்சல் ஏற்பட்ட பகுதிகளுக்குச் சென்று உடனடியாக நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொள்கிறது.

காய்ச்சல் பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, நடமாடும் மருத்துவ குழுக்கள் காய்ச்சல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கே சென்று உடனடி சிகிச்சை அளித்து வருகின்றன. இதுவரை 80,197 முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 13,68,601 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். 14,197 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு குணமடைந்து நலமுடன் உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் தற்காலிக பணியாளர்கள் ஏறக்குறைய 22,000 பேர் வீடு வீடாக சென்று கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்கும் பணி மற்றும் புகை மருந்து அடிக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொசு உற்பத்தியை தடுக்க தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளது.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேர காய்ச்சல் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் டெங்குக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ரத்த அணுக்கள், பரிசோதனை கருவிகள், மருந்துகள், ரத்தக்கூறுகள் மற்றும் ரத்தம் ஆகியவை போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

'எலிசா' முறையில் டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்க பரிசோதனை மையங்கள் 125 ஆக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. தினந்தோறும் ihip.nhp.gov.in/idsp என்ற இணைய வழியாக, காய்ச்சல் பாதிப்புகள் பதிவேற்றப்பட்டு அவை உடனக்குடன் சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில் இந்திய மருத்துவ முறை பாரம்பரிய மருந்துகளான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் மலைவேம்பு இலைச்சாறு போன்றவை அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் குறும்படம் மற்றும் விளம்பரங்கள் வெளியீடு மூலம் கொசு உற்பத்தியை தடுப்பதற்கான மக்களின் பங்கு குறித்தும், காய்ச்சல் பற்றிய சிகிச்சைகள் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. டெங்கு தடுப்பு நடவடிக்கைக்காக சுமார் 21,000 களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்பு பணிகள் செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story