வீடு புகுந்து 6½ பவுன் நகை திருட்டு
கிணத்துக்கடவு அருகே வீடு புகுந்து 6½ பவுன் நகை திருடப்பட்டது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 33). தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஆறுமுகம் கோவை மேட்டுப்பாளையம் சென்றதாக தெரிகிறது. இதற்கிடையில் அவரது அம்மா கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது, கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து மேட்டுப்பாளையம் சென்ற ஆறுமுகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 6½ பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலின் பெயரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிந்திருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.