தொழிலாளி வீட்டை சேதப்படுத்திய பொதுமக்கள்
காங்கயம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் தொழிலாளி குடியிருந்த வீட்டை கிராம் பொதுமக்கள் சிலர் சேதப்படுத்தியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:-
தொழிலாளி
காங்கயம் அருகே நெய்க்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவா. கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 14 வருடங்களுக்கு முன்பு அப்பகுதி கிராம மக்கள் ஆதரவுடன் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வந்ததார். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக அந்த இடத்தில் குடியிருக்க வேண்டாம் என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கிராம பொதுமக்கள் ஒன்று கூடி ஆலோசித்து சிவா நெய்க்காரன்பாளையத்தில் குடியிருக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளனர். பின்னர் இந்த கருத்தை சிவாவிடம் கூறியுள்ளனர். அதற்கு சிவா செல்போன் மூலம் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம பொதுமக்கள் சிலர் நேற்று முன்தினம் இரவு சிவாவின் வீட்டை இடித்து சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததால் வீட்டை இடிப்பதை நிறுத்தி விட்டு கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து சிவா தனது மகன் குடியிருக்கும் படியாண்டிபாளையம் பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றார்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து காங்கயம் போலீஸ் நிலையத்தில் சிவா புகார் கொடுத்தார். புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் இது தொடர்பாக நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், காங்கயம் தாசில்தார் புவனேஸ்வரி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் ப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.