தஞ்சை மாவட்டத்தில், ஒரேநாளில் 24 வீடுகள் இடிந்து சேதம்
தஞ்சை மாவட்டத்தில் மழையில் நனைந்து ஈரமாக காணப்பட்ட 24 வீடுகள் ஒரே நாளில் இடிந்து சேதம் அடைந்தன.
தஞ்சை மாவட்டத்தில் மழையில் நனைந்து ஈரமாக காணப்பட்ட 24 வீடுகள் ஒரே நாளில் இடிந்து சேதம் அடைந்தன.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோர் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. தொடக்க காலத்தில் ஒரு வாரம் விடாமல் அடைமழை போன்று பெய்தது. அதன் பின்னர் மழை இன்றி அவ்வப்போது விட்டு, விட்டு பெய்து வந்தது.
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்கள் மழை காணப்பட்டது. அதன் பின்னர் 2 நாட்கள் மழை இல்லாத நிலையில் மீண்டும் மழை பெய்யத்தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலையில் பலத்த மழை கொட்டியது.
24 வீடுகள் இடிந்து சேதம்
இந்த மழை காரணமாக இன்னும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை இன்றி வெயில் காணப்படுகிறது. பகலில் வெயில் அடித்தாலும் இரவு நேரங்களில் பனிமூட்டம், கடும் குளிர் நிலவி வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று வரை இந்த ஆண்டு சராசரியாக 1,164 மி.மீ. மழை பெய்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள குடிசை வீடுகள் மழையில் நனைந்து ஈரமாக காணப்பட்டது. இந்த நிலையில் ஒரே நாளில் தஞ்சை மாவட்டத்தில் 22 குடிசை வீடுகள் பகுதி இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. இதே போல் 2 ஓட்டு வீடுகள் பகுதி சேதம் அடைந்தன. வீடுகள் இடிந்து விழுந்தாலும் யாருக்கும் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.