வால்பாறையில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதம்
வால்பாறையில் கனமழை பெய்ததில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைந்தன.
வால்பாறை
வால்பாறையில் கனமழை பெய்ததில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைந்தன. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வால்பாறையில் கனமழை
வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக அவ்வபோது பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டாரம், எஸ்டேட் பகுதிகளில் சூறாவளி கனமழை பெய்தது. இதன் காரணமாக சிறுவர் பூங்கா பகுதியில் நகராட்சி கால்பந்தாட்ட மைதானத்தின் அருகே மண்சரிவு ஏற்பட்டு, தடுப்பு சுவர் சரிந்து விழுந்தது. இதில் மேரிேஜாஸ், லில்லி ஆகியோரின் வீடுகள் சேதமடைந்து, அந்தரத்தில் தொங்குகின்றன. இதையடுத்து அந்த வீடுகளில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர் மழையின் காரணமாக வாழைத்தோட்டம் ஆற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையாக விளங்கும் சோலையாறு அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 128.06 அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்தது.
சோலையாறு அணைக்கு வினாடிக்கு 2,676 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் மின்நிலையங்கள் இயக்கப்பட்டு 848 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
மேல்நீரார்- 83, கீழ்நீரார்-65, வால்பாறை-57, சோலையாறு அணை- 46, பொள்ளாச்சி-23, நெகமம்-8.