வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது


வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
x
தினத்தந்தி 5 Sept 2023 3:45 AM IST (Updated: 5 Sept 2023 3:45 AM IST)
t-max-icont-min-icon

தேவர்சோலை அருகே கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

நீலகிரி

கூடலூர்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தாமதமாக பெய்ய தொடங்கியது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்வதன் மூலம், நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படும். ஆனால், சில நாட்கள் மட்டுமே மழை பெய்தது. அதன் பின்னர் பெய்யவில்லை. இதனால் அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனது. இதனால் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் அடித்து வருகிறது. மேலும் நீர்நிலைகளும் வறண்டு காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. இதேபோல் தேவர்சோலை அருகே பாடந்தொரை பகுதியிலும் கனமழை பெய்தது. இதனால் ஆறுகள் உள்பட அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்தநிலையில் ஆலவயல் பகுதியில் இரவு 10 மணிக்கு வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள் வீட்டுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, திடீர் கனமழையால் வாய்க்காலில் தண்ணீர் வரத்து அதிகரித்து வீடுகளுக்குள் புகுந்துவிட்டது என்றனர். நீலகிரி மாவட்டத்தில் நேற்று 8.30 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம்(மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-1.2, நடுவட்டம்-12, கிளன்மார்கன்-5, குந்தா-6, அவலாஞ்சி-16, எமரால்டு-7, கூடலூர்-72, தேவாலா-84, அப்பர் கூடலூர்-70, செருமுள்ளி-22, பாடந்தொரை-23, ஓவேலி-42, பந்தலூர்-45, சேரங்கோடு-10. அதிகபட்சமாக தேவாலாவில் 8 செ.மீ. மழை பதிவானது.


Next Story