20 நரிக்குறவர்களுக்கு குடியிருப்பு


20 நரிக்குறவர்களுக்கு குடியிருப்பு
x
தினத்தந்தி 3 Jan 2023 6:45 PM GMT (Updated: 3 Jan 2023 6:47 PM GMT)

உளுந்தூர்பேட்டையில் 20 நரிக்குறவர்களுக்கு குடியிருப்பு எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் நரிக்குறவர் இன மக்களுக்காக முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு தனது சொந்த செலவில் 20 குடியிருப்புகளை கட்டினார். இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதை முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பேசியதாவது:-

2023-ம் ஆண்டின் சிறப்பான தொடக்கமாக இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன். அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வீடுகளை கட்டி கொடுத்த மாவட்ட செயலாளர் குமரகுருவை நான் பாராட்டுகிறேன். அனைவருக்கும் இருக்க வீடு, உண்ண உணவு, உடுத்த உடை வேண்டும். இவற்றை வழங்கியவர் எம்.ஜி.ஆர்., அவருக்கு பிறகு ஜெயலலிதா. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறோம் என்பது போல் 20 நரிக்குறவர்களின் குடும்பங்களில் நாம் சிரிப்பை காண்கிறோம். இதுதான் அ.தி.மு.க. பொங்கல் தொகுப்பில் கரும்பை கூட வழங்காமல் நிராகரித்து விட்டார்கள். ஒட்டு மொத்த விவசாயிகள், அ.தி.மு.க.வின் கோரிக்கையை தொடர்ந்து தான் தற்போது கரும்பையும் பொங்கல் தொகுப்பில் சேர்த்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் பொங்கல் தொகுப்பு என்கிற திட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2,500 வழங்கியபோது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டார். ஆனால் தற்போது அவர் ஆயிரம் ரூபாய் தான் வழங்குகிறார். கொரோனா காலத்தில் இருந்து மீண்டு வரக்கூடிய மக்களுக்கு முதல்-அமைச்சர் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நரிக்குறவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்குமார், தமிழ்நாடு சக்கரை இணைய தலைவர் ராஜசேகர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பிரபு, அழகுவேல் பாபு, ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் மணிராஜ், செண்பகவேல், சந்திரன், ஏகாம்பரம், நகர செயலாளர்கள் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story