வீடுகளை இழந்த 24 பேருக்கு வீட்டு மனை பட்டா


வீடுகளை இழந்த 24 பேருக்கு வீட்டு மனை பட்டா
x

திருச்சென்னம்பூண்டியில் 4-வது செந்தமிழ் நகர் உதயமானது. வீடுகளை இழந்த 24 பேருக்கு வீட்டுமனை பட்டாவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

திருச்சென்னம்பூண்டியில் 4-வது செந்தமிழ் நகர் உதயமானது. வீடுகளை இழந்த 24 பேருக்கு வீட்டுமனை பட்டாவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

சாலை விரிவாக்கம்

தஞ்சையை அடுத்த பூதலூர் தாலுகா திருச்சென்னம்பூண்டி கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையை விரிவுபடுத்தும்போது சாலையோரத்தில் வசித்த 24 குடும்பங்கள் தங்களது வீடுகளை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர்கள்.

தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் அடித்தட்டு மக்களான இவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார். இதனையடுத்து அதே கிராமத்தில் இவர்களுக்கு வீடு வழங்க முடிவு செய்யப்பட்டு மிக அருகில் உள்ள பட்டா நிலத்தின் உரிமையாளரிடம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

24 பேருக்கு வீட்டு மனை பட்டா

பின்னர் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் அரசிடம் இருந்து நிதியை பெற்று ரூ.4 லட்சத்திற்கு அந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலம் 24 மனைகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மனைக்கும் குடிநீர் வசதி, வடிகால் வசதி, சாலை, மின்சார வசதியுடன் 'செந்தமிழ் நகர்' என பெயரிடப்பட்டு, வீடுகளை இழந்த 24 பேருக்கும் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை திருச்சென்னம்பூண்டி கிராமத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு 24 பேருக்கு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைக்கு சென்று பட்டா வழங்கினார்.

4-வது செந்தமிழ் நகர்

நிகழ்ச்சியில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், பூதலூர் ஒன்றியக்குழு தலைவர் அரங்கநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரெங்கராஜன், தாசில்தார் பிரேமா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா, சுஜாதா, ஊராட்சி மன்ற தலைவர் வடிவழகன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 3 இடங்களில் செந்தமிழ ்நகர் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது 4-வது நகராக திருச்சென்னம்பூண்டியில் செந்தமிழ் நகர் உருவாக்கப்பட்டுள்ளது.

புல்வெட்டும் எந்திரம்

தஞ்சை அரண்மனை வளாகத்தில் செயல்படும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 40 பள்ளிகளுக்கு புல்வெட்டும் எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கி முதல் கட்டமாக 5 பள்ளிகளுக்கு புல்வெட்டும் எந்திரங்களை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெண்கள் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா

இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு குறித்து வழக்கு இருந்தது. தற்போது தீர்ப்பு வந்துள்ளது. அந்த தீர்ப்பு குறித்து அதிகாரிகளிடம் பேசி முடிவு எடுக்கப்படும்.

முதல்கட்டமாக பெண்கள் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. போதிய நிதி வந்ததும் அதற்கு ஏற்ப கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

கூடுதல் கட்டணம்

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் பெற்றோர்கள் தைரியமாக வந்து புகார் அளிக்க வேண்டும். புகார் அளித்தால் அந்த பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இருந்தாலும் நாங்கள் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம், நன்கொடை வசூலிக்க வேண்டாம் என பள்ளி நிர்வாகத்திடம் வேண்டுகோளாக வைத்து இருக்கிறோம்.

தனியார் பள்ளி கட்டணம் வசூலுக்கு ஒரு கட்டுப்பாடு கொண்டு வர ஏற்பாடு செய்யப்படும். தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு திட்டத்தின் கீழ் இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். அரசு பள்ளிகள் அருகில் இருந்தாலும் தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை கருத்தில் கொண்டு 25 சதவீத இட ஒதுக்கீடு இலவச கல்வி திட்டத்தின் மூலம் சேர்க்க பெற்றோர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். அது தவறில்லை. அடுத்த 5 ஆண்டுகளுக்கு அனைத்து வசதிகளும் அரசு பள்ளிகளிலும் வந்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story