வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்


வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 19 Jun 2023 8:45 PM GMT (Updated: 19 Jun 2023 8:45 PM GMT)

வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று பெங்கால்மட்டம் பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி

ஊட்டி

வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று பெங்கால்மட்டம் பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

குறைதீர்ப்பு கூட்டம்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். ஊட்டி அடுத்த பெங்கால்மட்டம் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மைநிலைமட்டம்-கிட்டட்டிமட்டம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறோம். தினக்கூலியாக ரூ.150 கிடைக்கிறது. நாங்கள் கூலி வேலைக்கு செல்லும் இடத்தில் தனியார் மூலம் எங்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. உடல்நிலை சரியில்லை உள்பட சில காரணங்களால் வேலைக்கு செல்லாவிட்டால், கட்டாயமாக பணிக்கு வர உத்தரவிடுகின்றனர். இல்லாவிட்டால் தங்கும் இடத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்கின்றனர். இதனால் குழந்தைகளுடன் எங்கு செல்வது என்று தெரியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.

வீட்டுமனை பட்டா

இந்தநிலையில் குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட 3 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலம் மீட்கப்பட்டு தற்போது பாலகொலா ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, வீடு இல்லாமல் தவிக்கும் ஏழை மக்களாகிய எங்களுக்கு அரசால் மீட்கப்பட்ட அந்த இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க நீலகிரி மாவட்ட தலைவர் அடையாள குட்டன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தோடர் இன மக்கள் வசிக்கும் கிராமங்களில் மேய்ச்சல் நிலங்களை வனத்துறையினர் கையகப்படுத்தியதால், தற்போது மேய்ச்சல் நிலம் இல்லாமல் கால்நடைகளை வளர்க்க சிரமமாக உள்ளது. எனவே, விளை நிலங்களில் உள்ள மரங்களை அப்புறப்படுத்தி எங்களுக்கு விவசாயம் செய்வதற்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். புலிகளால் எங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளை தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து கிராமங்களிலும் குடிநீர் வினியோகத்தை முறையாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story