சாத்தான்குளம் வழக்கில் இன்னும் எத்தனை சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டி உள்ளது? கீழ் கோர்ட்டு அறிக்கை அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


சாத்தான்குளம் வழக்கில் இன்னும் எத்தனை சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டி உள்ளது? கீழ் கோர்ட்டு அறிக்கை அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

சாத்தான்குளம் வழக்கில் இன்னும் எத்தனை சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டி உள்ளது? என்று அறிக்கை தாக்கல் செய்யும்படி, மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து தாக்கப்பட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. இதில் அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசார் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த இரட்டை கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்று ஜெயராஜின் மனைவி செல்வராணி, கடந்த ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கூடுதல் அவகாசம்

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. எனவே கூடுதலாக அவகாசம் அளிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டில் கோரிக்கை வைத்தது.

அதன்படி 6 மாதம் கூடுதலாக அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது சாட்சியங்கள் விசாரணை நடந்து வருவதால், வழக்கு விசாரணையை முடிக்க மேலும் அவகாசம் வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் சம்பந்தப்பட்ட கோர்ட்டு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் சாட்சியங்கள் விசாரணை நடக்கிறது. சமீபத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு விசாரணையை முடிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.

இதனை தொடர்ந்து நீதிபதி, இதுவரை எத்தனை சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. எத்தனை சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டி உள்ளது, எவ்வளவு கால அவகாசம் இன்னும் தேவைப்படும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கீழ்கோர்ட்டுக்கு உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

1 More update

Next Story