ஐஸ்வர்யா வீட்டில் திருட்டுப்போன நகை எவ்வளவு? உயர் போலீஸ் அதிகாரி விளக்கம்
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் எவ்வளவு நகை திருட்டுப்போனது என்பது குறித்து உயர் போலீஸ் அதிகாரி விளக்கம் அளித்தார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகை திருட்டு போனது பற்றி தவறான தகவல்கள் வெளியாகிறது. அவர் புதிதாக புகார் கொடுத்து உள்ளதாகவும் தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.
இந்த வழக்கை பொறுத்தமட்டில் அவர் முதலில் கொடுத்த புகாரே போதுமானது. அந்த புகாரில் சுமார் 60 பவுன் நகைகளுக்கு மேல் தங்க வைர நகைகள் திருட்டு போயிருக்கிறது என்று தெரிவித்து உள்ளார்.
புகாரில் இவ்வளவு நகைகள்தான் என்று சரியாக சொல்ல முடியாது. அதைத்தான் அவரும் சுமார் என்று புகாரில் குறிப்பிட்டு உள்ளார். இந்த வழக்கில் வேலைக்கார பெண் ஈஸ்வரியை நம்பி சுதந்திரமாக வீட்டுக்குள் நடமாட விட்டுள்ளனர். அதுதான் பிரச்சினையில் முடிந்து விட்டது.
2019-ம் ஆண்டு ஜூன், ஜூலையில் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுசும் சேர்ந்து வாழ்ந்த ஆழ்வார்பேட்டை வீட்டில் வைத்துதான் நகை திருட்டு போய் உள்ளது.
183 பவுன் நகைகள் திருட்டு
பெரும்பாலும் ஐஸ்வர்யா தூங்கும்போதுதான் நகைகளை திருடி உள்ளனர். இந்த வழக்கை பொறுத்தமட்டில் 183 பவுன் நகைகள் மட்டும் திருட்டு போய் இருப்பது தெரியவந்துள்ளது. அதில் 143 பவுன் நகைகளை மீட்டு விட்டோம். மீட்க வேண்டிய நகைகள் வங்கியில் அடமானம் வைக்கப்பட்டு உள்ளது.
கோர்ட்டு அனுமதி பெற்று அந்த நகைகளை மீட்டு விடுவோம். 30 கிராம் வைர நகைகளும் மீட்கப்பட்டு உள்ளன. அதில் விலை உயர்ந்த வைர நெக்லசும் அடங்கும். 4 கிலோ வெள்ளி பொருட்களை மீட்டு உள்ளோம். 45 ஆயிரம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டு உள்ளது.
வங்கி ஒன்றில் ரூ.35 லட்சம் கடன் வாங்கி வேலைக்கார பெண் ஈஸ்வரி, சோழிங்கநல்லூரில் நிலம் வாங்கி அதில் வீடு கட்டி இருக்கிறார். இந்த கடனுக்காக திருடிய நகைகளை விற்று பணம் செலுத்தி உள்ளார்.
குற்றப்பத்திரிகை
அதனால் சோழிங்கநல்லூரில் கட்டிய வீட்டின் நிலப்பத்திரங்களும் மீட்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள நகைகள் மீட்கப்பட்டவுடன் குற்றவாளிகள் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த வழக்கை பொறுத்தமட்டில் உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இ்வ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.