பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?


பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி? என்பது குறித்து சிக்கலாம்பாளையம் அரசு பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி? என்பது குறித்து சிக்கலாம்பாளையம் அரசு பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிணத்துக்கடவு தீயணைப்புத்துறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சிக்கலாம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய அதிகாரி தங்கராஜ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்கும் முறை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு நிலைய அதிகாரி தங்கராஜ் கூறியதாவது:-

பட்டாசுகளை கடையில் வாங்கி செல்லும்போது மிகவும் கவனமுடன் எடுத்து செல்ல வேண்டும். சமையல் அறைகளில் வைக்க கூடாது. பஸ் நிலையம், கியாஸ் குடோன், பெட்ரோல் நிலையங்களின் அருகில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. அதிக சத்தம் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். இதனால் உடலும், மனதும் பாதிக்கப்படும். முதியவர்கள், மாற்றுதிறனாளிகள், நோயாளிகள் அருகில் சென்று பட்டாசுகளை வெடிக்க கூடாது.

தீக்காயத்துக்கு சிகிச்சை

பட்டாசுகளை சட்டை பாக்கெட்டுகளில் வைக்க கூடாது. குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும்போது பெரியவர்கள் தங்களது மேற்பார்வையில் அருகில் ஒரு வாளி தண்ணீர் வைத்துக்கொண்டு கண்காணிக்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை எக்காரணம் கொண்டும் கையால் தொடவோ, காலால் மிதிக்கவோ கூடாது. ராக்கெட், புஸ்வானம் போன்ற பட்டாசுகளை வைக்கோல் போர், குடிசைகள், தென்னை ஓலை வேய்ந்த கூரைகள் அதிகம் உள்ள இடங்களில் வெடிக்க கூடாது. டப்பாக்கள், கண்ணாடி பாட்டில்கள், டின்கள் போன்றவற்றில் வைத்து பட்டாசுகளை வெடிக்க கூடாது. பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் தீக்காயத்திற்கு குளிர்ந்த நீர் ஊற்றலாம். அதன்பின்னர் மேல் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய சிறப்பு நிலை அலுவலர் சங்கரன் நன்றி கூறினார்.


Next Story