ராம்சர் அங்கீகாரம் 2 கண்மாய்களுக்கு கிடைத்தது எப்படி?


ராம்சர் அங்கீகாரம் 2 கண்மாய்களுக்கு கிடைத்தது எப்படி?-சித்திரங்குடி, காஞ்சிரங்குளம் குறித்த ருசிகர தகவல்கள்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் சக்கரக்கோட்டை கண்மாய், தேர்த்தங்கல், சாயல்குடி அருகே மேல செல்வனூர், முதுகுளத்தூர் சித்திரங்குடி, காஞ்சிரங்குளம் ஆகிய 5 இடங்களில் உள்ள கண்மாய்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இந்த சரணாலயங்களில் ஆண்டுதோறும் மழை சீசனையொட்டி தண்ணீர் நிரம்பும் என்பதால், கண்மாய்களில் உள்ள மரங்களில் தஞ்சம் அடைய டிசம்பர் மாதம் முதல் பறவைகள் வரத்தொடங்கும். வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பறவைகள் வந்து குவியும்.

இவ்வாறு வரும் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து மீண்டும் குஞ்சுகளுடன் ஏப்ரல் மாதம் திரும்பி செல்லும்.

உலகளாவிய அமைப்பு

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அமைந்துள்ள சித்திரங்குடி மற்றும் காஞ்சிரங்குளம் ஆகிய இரண்டு பறவைகள் சரணாலயங்களும், கடந்த வாரம் ராம்சர் அங்கீகாரத்தில் இடம்பெற்றுள்ளதாக மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்புதான் மன்னார் வளைகுடா பகுதி ராம்சர் அங்கீகாரம் பெற்றிருந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சித்திரங்குடி, காஞ்சிரங்குளம் சரணாலயங்களுக்கு ஒரே நேரத்தில் அதே சிறப்பு கிடைத்திருக்கிறது. ராம்சர் என்பது ஈரநிலங்கள், சதுப்பு நிலங்களை பாதுகாப்பதன் அவசியத்்தை வலியுறுத்தும் உலகளாவிய அளவில், பல்வேறு நாடுகள் இடம்பெற்றுள்ள ஒரு அமைப்பு ஆகும்.

ராம்சர் அங்கீகாரம்

சரி... வாருங்கள்... அந்த 2 சரணாலயங்கள் அமைந்துள்ள கண்மாய்களை ஒரு விசிட் அடித்துவிட்டு வரலாம். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் சித்திரங்குடி கண்மாய் உள்ளது. 48 எக்டேர் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாய்க்குள் வளர்ந்து நிற்கும் நாட்டு கருவேலம் மரங்களில் ஆண்டுதோறும் மழை சீசனில் டிசம்பர் மாதத்தில் கூைழக்கடா, நாரை, மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் நிறநாரை உள்ளிட்ட பல வகையான பறவைகள் வந்து இந்த மரக்கிளைகளில் கூடுகட்டி வாழும். 1989-ம் ஆண்டு சித்திரங்குடி கண்மாய், பறவைகள் சரணாலயமாக அரசால் அறிவிக்கப்பட்டது. முதுகுளத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் கமுதி செல்லும் சாலையில் அமைந்துள்ளது காஞ்சிரங்குளம் கிராமம். இந்த கிராமத்தில் 48 எக்டேர் பரப்பில் அமைந்துள்ள கண்மாயில், காஞ்சிரங்குளம் சரணாலயம் உள்ளது. இதுவும் 1989-ம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. தற்போது 2 சரணாலயங்களும் ஒரே நேரத்தில் ராம்சர் அங்கீகாரத்தை பெற்றுள்ளன, இது இரு கிராம மக்களுக்கும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வனத்துறை அதிகாரி

இது பற்றி ராமநாதபுரம் மாவட்ட உதவி வன பாதுகாவலர் கணேசலிங்கம் கூறியதாவது:- உலக அளவில் உள்ள ஈரப்பத நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கடந்த 1971-ம் ஆண்டு ஈரான் நாட்டில் ராம்சர் நகரில் சர்வதேச அளவில் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டது. அப்போது ஈரப்பத சதுப்பு நிலங்கள் குறித்து பட்டியலிடப்பட்டு ராம்சர் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. 560 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 21 தீவுகளை உள்ளடக்கிய ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதியில் உள்ள மன்னார் வளைகுடா உயிர் கோள காப்பகம் ராம்சர் அங்கீகாரத்தில் இடம் பெற்றுள்ளதாக ஏற்கனவே மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 16 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 5 சரணாலயங்கள்.

அதிகமான பார்வையாளர்கள்

இதுவரையிலும் தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்கரை சரணாலயம் மட்டுமே ராம்சர் அங்கீகாரத்தில் இடம் பெற்றிருந்தது தற்போது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள சித்திரங்குடி மற்றும் காஞ்சிரங்குளம் என 2 பறவைகள் சரணாலயங்களும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த அங்கீகாரத்தின் மூலம், சரணாலயங்கள் அமைந்துள்ள 2 கிராமங்களுக்கும் மேலும் பல்வேறு வசதிகள் கொண்டு வருவதற்கும், சரணாலயங்களை மேம்படுத்துவதற்கும் அரசு கூடுதல் நிதி ஒதுக்கி சிறப்பு கவனம் செலுத்தும். இந்த பறவைகள் சரணாலயங்களுக்கு இன்னும் அதிகமான பார்வையாளர்கள் வருவார்கள். தேவையான வளர்ச்சி திட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும். எனவே ராம்சர் அங்கீகாரத்தில் இந்த 2 சரணாலயங்களும் இடம்பெற முயற்சி எடுத்த வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும், முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் கிராம மக்களுக்கும் ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story