அதிக மகசூல் பெற விதைகளை கடினப்படுத்தி பயன்படுத்துவது எப்படி?-விவசாய அதிகாரி விளக்கம்
மானாவாரி சாகுபடியில் வறட்சியை தாங்கிட விதைகளை கடினப்படுத்தி பயன்படுத்துவது குறித்து விவசாய அதிகாரி சுப்பாராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
மானாவாரி சாகுபடியில் வறட்சியை தாங்கிட விதைகளை கடினப்படுத்தி பயன்படுத்துவது குறித்து விவசாய அதிகாரி சுப்பாராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
தொழில்நுட்பம்
விருதுநகர் விதை சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் சுப்பாராஜ் தெரிவித்துள்ளதாவது:-
பயிரிடப்படும் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் பருவமழையை மட்டுமே நம்பியுள்ளது. பயிர்களில் மகசூலை அதிகரித்திட பல தொழில்நுட்பங்கள் பின்பற்றப்படுகின்றன. அவற்றுள் விதை கடினப்படுத்தல் என்பது முக்கியமான மற்றும் எளிதான தொழில்நுட்பமாகும். இதனால் குறைந்த செலவில் 10 முதல் 15 சதவீதம் மகசூல் அதிகரிக்கிறது.
20 கிராம் பொட்டாசியம் குளோரைட்டினை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும். அந்த கரைசலில் 650 மி.லி. எடுத்து நெல், கம்பு, பருத்தி விதையினை கடினப்படுத்த அதில் ஒரு கிலோ விதையை 10 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் சிறிது நேரம் நிழலில் உலர்த்தி இயல்பான ஈரப்பதம் வரும் வரை வெயிலில் உலர்த்தி பின்னர் விதைக்க வேண்டும்.
விதைக்க வேண்டும்
சூரியகாந்தி விதையை 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 20 கிராம் பொட்டாசியம் டை நைட்ரஜன் பாஸ்பேட்டில் ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்த கரைசலில் 650 மில்லி எடுத்து அதில் ஒரு கிலோ விதையை 16 மணி நேரம் ஊற வைத்து பின்னர் சிறிது நேரம் உலர்த்தி அதன் இயல்பான ஈரப்பதம் வரும் வரை வெயிலில் உலர்த்தி பின் விதைக்க வேண்டும்.
உளுந்து, பாசிப்பயறு விதைகளை ஒரு கிராம் சிங் சல்பேட் மற்றும் ஒரு கிராம் மாங்கனிஸ் சல்பேட்டினை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து 350 மில்லி எடுத்து அதில் ஒரு கிலோ விதையை 3 மணி நேரம் ஊற வைத்து பின்னர் நிழலில் உலர்த்தி அதன் இயல்பான ஈரப்பதம் வரும் வரை வெயிலில் உலர்த்தி பின் விதைக்க வேண்டும். விதைக்க பயன்படுத்தும் விதையில் அளவினைப் பொறுத்து கரைசலின் அளவினை கூட்டிக்கொள்ள வேண்டும். விவசாயிகள் இந்த எளிய தொழில்நுட்பத்தினால் பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.