வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது எப்படி?-கலெக்டர் அனிஷ்சேகர் விளக்கம்


வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது எப்படி?-கலெக்டர் அனிஷ்சேகர் விளக்கம்
x

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது எப்படி? என்பதற்கு கலெக்டர் அனிஷ் சேகர் விளக்கமளித்துள்ளார்.

மதுரை

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது எப்படி? என்பதற்கு கலெக்டர் அனிஷ் சேகர் விளக்கமளித்துள்ளார்.

இணையதளம்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் அனிஷ் சேகர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் நோக்கில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை கடந்த 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் விரும்பும்பட்சத்தில் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் நேரடியாக இணைத்துக் கொள்ளலாம். அதற்காக www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline கைப்பேசி செயலியினை பதிவிறக்கம் செய்தும், www.voterportal.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், நேரடியாக ஆரார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

மேலும் இந்த பணிக்காக அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் இதர தேர்தல் பணியாளர்கள் வாக்காளர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று ஆதார் எண்ணை பெற்று இதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட படிவம் 6B அல்லது கருடா கைப்பேசி செயலி மூலமாக இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு அனைத்து வாக்காளர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

17 வயது...

மேலும் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் பதிவு மற்றும் திருத்தங்கள் ஆகியவற்றிற்கு புதிய படிவங்களை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி, புதிய வாக்காளரை சேர்த்திட படிவம் 6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, வாக்காளர்களின் முகவரி மாற்றம்-பதிவு திருத்தம்-புதிய புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை பெறுதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறிக்க படிவம் 8 பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. புதிய இளம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்திட ஏதுவாக ஜனவரி மாதம் வரை காத்திருக்க வேண்டியதில்லை. இனி ஆண்டுதோறும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களின் முதல் தேதியினை அடிப்படையாகக் கொண்டு புதிய வாக்காளர்களை சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் அடிப்படையில் 17 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் தங்களது விவரங்களை படிவம்-6ல் பூர்த்தி செய்து வழங்கும் பட்சத்தில், 18 வயது பூர்த்தியாகும் நாளில் அவர்களது பெயர் நேரடியாக வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படும்.

மேலும், இந்திய தேர்தல் ஆணையம் 4-ந் தேதி(இன்று) முதல் 2023-ஆம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தினை தொடங்க உள்ளது. இதன்படி தொலைவிலுள்ள வாக்குச்சாவடிகளை திருத்துதல், பழுதடைந்த வாக்குச்சாவடி கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்களை தேர்வு செய்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகள் தொடர்பாக ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால் வாக்காளர்கள், சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் மனு அளிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story