வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? கலெக்டர் அரவிந்த் விளக்கம்


வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? கலெக்டர் அரவிந்த் விளக்கம்
x

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? என்பது குறித்து அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் விளக்கம் அளித்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? என்பது குறித்து அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் விளக்கம் அளித்தார்.

ஆலோசனைக் கூட்டம்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடனான கலந்தாலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் தனித் தகவல்களை உறுதிப்படுத்திடவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது இருவேறு தொகுதிகளில் இடம்பெறுதல் ஆகியவற்றை தவிர்க்கும் பொருட்டும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 1-ந் தேதி முதல் நடந்து வருகிறது.

எப்படி இணைக்க வேண்டும்?

அதன்படி குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in என்ற இணையதளத்தில் அல்லது வோட்டர் ஹெல்ப் லைன் (வி.எச்.ஏ.) என்ற செயலி மூலமாக பதிவு செய்யலாம். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கொண்டு வரும் படிவம் 6 பி அல்லது கருடா மொபைல் ஆப்-ல் பூர்த்தி செய்து கொடுத்தும், வாக்காளர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர் உதவி மையம் மற்றும் இ- சேவை மையத்தை அணுகியும் பதிவு செய்து கொள்ளலாம்.

படிவம் 6 பி அல்லது கருடா மொபைல் ஆப்-ல் வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், சட்டமன்ற தொகுதி, ஆதார் அட்டை எண், செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். இதை ஊக்குவிக்கும் பொருட்டு மேற்கண்ட இணையதளம் அல்லது செயலியில் பதிவு செய்த பதிவு எண்ணை (ரெபரன்ஸ் எண்) https://elections.tn.gov.in/getacertificate என்ற இணையதளத்தில் மாவட்ட அளவில் பதிவு செய்யும் முதல் 1000 நபர்களுக்கு மின்னணு சான்றிதழ்கள் சென்னை தலைமைத் தேர்தல் அலுவலகம் மூலமாக வழங்கப்படும்.

31-ந் தேதிக்குள் அறிக்கை

எனவே அனைத்து துறை அதிகாரிகளும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதை ஊக்குவிக்க வேண்டும். இது தொடர்பான முன்னேற்ற அறிக்கையினை 31-ந் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மீனாட்சி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், தாசில்தார்கள் சுசீலா (தேர்தல்), சேகர் (அகஸ்தீஸ்வரம்), வினோத் (கல்குளம்), தாஸ் (தோவாளை) உட்பட துறைசார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story