பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி?


பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி? என்பது குறித்து கல்வியாளர் கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

காலங்கள் கடந்தபோதும், நாகரிகங்கள் வளர்ந்தபோதும் பெண்களின் மீதான வன்முறைகளும், பாலியல் தாக்குதல்களும் குறைந்தபாடில்லை. வரதட்சணை, தொடுதல், பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமைக்கான முயற்சிகள் என பெண்களின் மீதான தாக்குதல்கள் என்பது நீண்டுகொண்டே செல்கின்றன.

பள்ளிகள், கல்லூரிகள் என எங்கு சென்றாலும் சொல்ல முடியாத துயரத்தை பெண்கள் அனுபவித்து வருகிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் குறித்தான புகார்கள் அதிகரித்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய மகளிர் ஆணையம் தகவலும் தெரிவித்திருந்தது.

பாலியல் குற்றங்கள்

இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க போக்சோ சட்டம் உள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவார்கள். ஆனால், பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால் பல பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போதும் வெளியே சொல்லப்பயப்படுகிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் கணிசமாக அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி, கல்லூரி

சமீப காலமாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்த சம்பவங்களும், புகார்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. எனவே பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும், அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு சிறு வயதில் இருந்தே பெண் பிள்ளைகளிடம் ஏற்படுத்துவது அவசியம் ஆகிறது.

இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

அரசு மனநல காப்பகத்தின் பேராசிரியரும், டாக்டருமான பூர்ண சந்திரிகா:-

சிறு வயதில் இருந்தே பாலின சமத்துவம் என்றால் என்ன என்று சொல்லித்தர வேண்டும். பாலின சமத்துவத்தை நோக்கி நமது பயணம் இருக்க வேண்டும். சிறு வயதில் இருந்தே தொடுதலில் சரி எது? தவறு எது? என்பது குறித்து சொல்லித்தர வேண்டும். இதை வெளியில் சொல்வதற்கு அவர்களுக்கு தைரியத்தை கொடுக்க வேண்டும். மாணவி சோகமாக இருந்தால் என்ன நடந்தது என்று முதலில் கேட்க வேண்டும். அதை பக்குவமாக எதிர்கொள்ள வேண்டும். சமூக மாற்றத்திற்கான முதல் அடி வீட்டில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். பெண்ணையும், ஆணையும் சமமாக பார்க்கும் நிலை வந்துவிட்டாலே போதும் இந்த நிலை மாறும்.

பெண் தானே என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலை மாற வேண்டும். உடல் அமைப்பை கிண்டல் செய்தால் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்பது போல் பாலியல் ரீதியான அச்சுறுத்தல்கள் மீதும் எதிர்த்து குரல் கொடுக்கும் மனநிலை மாணவிகளுக்கு வரவேண்டும். சில இடங்களில் வீட்டிலேயே பாலியல் ரீதியான துன்புறுத்தல் நடப்பதால் அதை வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். எது நடந்தாலும் தைரியமாக வெளியே சொல்ல வேண்டும். பெண் பிள்ளை தான் பாதிக்கப்பட்டது குறித்து வெளியே சொல்லிய பின்னரும் அவருக்கு தொடர்ந்து பாதுகாப்பாக அரணாக நாம் இருக்க வேண்டும். மாணவர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்கும் உளவியல் ரீதியான வகுப்புகள் எடுக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல் பெண் குழந்தைகளுக்கு நடப்பது போல் ஆண் குழந்தைகளுக்கும் 18 சதவீதம் நடப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே, இருவருக்கும் பாலியல் ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

விழிப்புணர்வு

ராஜபாளையம் கல்லூரி பேராசிரியை சுவாதி முத்து:- பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொடர்பான சம்பவங்கள் நடைபெற்று வருவது வருந்தத்தக்கது. ஒரு சிலர் செய்யும் தவறு ஆசிரியர் சமுதாயத்தையே தவறாக பார்க்கக்கூடிய கண்ணோட்டத்தை ஏற்படுத்துகிறது. ஆசிரியர், மாணவர் உறவில் ஆசிரியர்கள் கல்வி கற்பிப்பதோடு பாடம் சம்பந்தமான ஆரோக்கியமான விவாதங்களோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் மனக்கட்டுப்பாடு என்பது ஒவ்வொரு ஆசிரியரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.

இன்றைய சூழ்நிலையில் வயதான ஆசிரியராக இருந்தாலும் மாணவிகளிடம் விளையாட்டாக பேசக்கூடிய நிலை அதிகமாக நிலவி வருகிறது. அந்த விளையாட்டு வினையாக மாறி பல பாலியல் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஆரம்பம் முதல் அளிக்க வேண்டும்.

கண்காணிப்பு

விருதுநகரை சேர்ந்த கல்வியாளர் டாக்டர் ஜெரால்டு ஞானரத்தினம்:-

கல்வி நிறுவனங்களில் பாலியல் பிரச்சினைகள் ஏற்படுவது மிகவும் வேதனைக்குரியது. கல்வி நிறுவன நிர்வாகம் இதற்கு உரிய கண்காணிப்பு நடைமுறைகளை உறுதியாக அமல்படுத்த வேண்டும். அவ்வாறு அமல்படுத்தினால் தான் இம்மாதிரியான நிகழ்வுகள் தடுக்கப்பட வாய்ப்பு ஏற்படும்.

கல்வி பயிற்றுவிக்க வருவோரும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டுமே தவிர தேவையற்ற பிரச்சினைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். பள்ளிகள் நிலையிலும் உயர்கல்வி நிறுவனங்களின் நிலையிலும் முறையான கண்காணிப்பு ஏற்பாடுகள் அமலில் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். மேலும் மாதம் ஒரு முறை விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பெரிய பாதிப்பு

விருதுநகர் கல்லூரி மாணவி ஜாய்ஸ்:-

பெண்ணால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு பாலியல் பிரச்சினை ஏற்பட்டால் தொடக்க நிலையிலேயே அதனை வலுவாக எதிர்க்க வேண்டும். அதனை வெளிக்கொணர வேண்டும். அது வெளியே தெரிந்தால் அவமானம் ஏற்பட்டு விடும் என்ற எண்ணத்தில் அது மறைக்கப்படும் போது தான் பாதிப்பு பெரிதாகி விடுகிறது. மேலும் பாலியல் பிரச்சினை ஏற்படுத்தும் நபர் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்க கல்வி நிறுவன நிர்வாகத்திடம் முறையிட வேண்டியது அவசியமாகும். கல்வி நிறுவனம் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இணைய தளம்

ஆலங்குளம் கல்லூரி மாணவி மாலினிதேவி:-

மாணவ-மாணவிகள் எந்தவித பிரச்சினைகளை கண்டு பயப்பட கூடாது. தைரியத்துடன் அதனை எதிர்த்து போராடி வெற்றி பெற வேண்டும்.

தற்போது அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறோம். காவலன் செயலி இருந்தாலும் அதை பெரும்பாலானோர் பயன்படுத்துவது இல்லை. இதனை கண்டிப்பாக அனைவரும் பயன்படுத்த வேண்டும். பாலியல் துன்புறுத்தல் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மனநல ஆலோசகர் மூலம் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்க வேண்டும். பாலியல் ரீதியான புகார்களை தெரிவிக்க அரசு, தனி இணையதளம் அல்லது செல்போன் ஆப் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

நல்லொழுக்க வகுப்புகள்

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த டாக்டர் செல்வராஜன்:- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொல்லைகள் இந்திய அளவில் ஒப்பிடும்பொழுது குறைவாகவே உள்ளது. இருந்தாலும் நமது கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் பாலியல் தொல்லைகள் குறித்த பிரச்சினைகள் குறித்தும் இதுபோன்ற நிகழ்வுகள் வரும் காலங்களில் எவ்வாறு எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என ஆரம்ப கல்வி முதல் பாலியல் தொல்லைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் முந்தைய காலங்களில் பள்ளியில் நல்லொழுக்க வகுப்புகள் வாரத்திற்கு 2 முறை நடத்தப்படும். அதில் மாணவர்களுக்கு நல்ல போதனைகள் வழங்கப்படும். தற்போது உள்ள காலங்களில் இதுபோன்ற வகுப்புகள் கிடையாது. எனவே வாரந்தோறும் 2 அல்லது 3 வகுப்புகள் நடத்த வேண்டும். இந்திய மருத்துவ கழகம் சார்பில் மாதந்தோறும் ஒவ்வொரு பள்ளிகளிலும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகிறோம்.

விசாரணை ஆணையம்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக மாணவர் சரவணகுமார்:-

பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு இருந்து வருகிறது. பாலியல் தொந்தரவு செய்து வரும் நபர்களை கண்டுபிடித்து தமிழக அரசு அவ்வப்போது தக்க நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் ஆங்காங்கே பாலியல் தொந்தரவு இருந்து கொண்டு தான் உள்ளது. எனவே பாலியல் சம்பந்தமாக பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளிடையே ஆசிரியர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களை புகார் அளிக்க ஏதுவாக விசாரணை ஆணையம் அரசின் சார்பில் எற்படுத்தி தர வேண்டும். மேலும் பாலியல் தொந்தரவு செய்யும் நபர்களை கடுமையான தண்டனை மூலம் தண்டிக்கப்பட வேண்டும்.

உளவியல் ஆலோசகர்

தமிழ்நாடு மாணவர்-பெற்றோர் நல சங்கத்தின் மாநில தலைவர் அருமைநாதன்:-

உளவியல் ரீதியாக மாணவர்களை, ஆசிரியர்கள் எதிர்கொள்வது மட்டுமே இதற்கு தீர்வாக அமையும். ஒவ்வொரு பள்ளிக்கும், கல்லூரிக்கும் உளவியல் ஆசிரியர்களை அரசே நியமிக்க வேண்டும். தற்போது இருக்கும் மாணவர்கள் சின்ன அவமானத்தையோ, ஏமாற்றத்தையோ தாங்க முடியாத நிலையில்தான் வளர்கிறார்கள். ஒரு சின்ன அவமானம் ஏற்பட்டவுடன் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் தான் இருக்கிறார்கள். பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ எந்த பிரச்சினை நடந்தாலும் அதை வெளியில் கொண்டுவருவதில்லை. ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் பிரச்சினையை சொன்னால் நம்மைத்தான் தவறாக நினைப்பார்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.

பாலியல் குற்றங்களுக்கு தண்டனை மட்டுமே தீர்வு கொடுக்காது. தண்டனை கொடுத்தாலும் இதை சரிசெய்ய முடியாது. பாலியல் என்பது உளவியல் ரீதியான ஒன்று. சமுதாய மனநிலை மாறவேண்டும். பள்ளியில் இருந்தே மாணவ, மாணவிகளிடம் உளவியல் ரீதியாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாள்தோறும் உளவியல் ரீதியான விஷயங்களை பேச வேண்டும். அரசு செலவினம் பார்க்காமல் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு உளவியல் ஆலோசகரை ஆசிரியராக நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story