பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி?-கல்வியாளர், உளவியல் ஆலோசகர்கள் கருத்து


பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி?-கல்வியாளர், உளவியல் ஆலோசகர்கள் கருத்து
x

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி?-கல்வியாளர், உளவியல் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர்

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி?-கல்வியாளர், உளவியல் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

காலங்கள் கடந்தபோதும், நாகரிகங்கள் வளர்ந்தபோதும் பெண்களின் மீதான வன்முறைகளும், பாலியல் தாக்குதல்களும் குறைந்தபாடில்லை.

வரதட்சணை, தொடுதல், பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமைக்கான முயற்சிகள் என பெண்களின் மீதான தாக்குதல்கள் என்பது நீண்டுகொண்டே செல்கின்றன.

பள்ளிகள், கல்லூரிகள் என எங்கு சென்றாலும் சொல்ல முடியாத துயரத்தை பெண்கள் அனுபவித்து வருகிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் குறித்தான புகார்கள் அதிகரித்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய மகளிர் ஆணையம் தகவலும் தெரிவித்திருந்தது.

பாலியல் குற்றங்கள்

இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க போக்சோ சட்டம் உள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவார்கள். ஆனால், பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால் பல பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போதும் வெளியே சொல்லப்பயப்படுகிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் கணிசமாக அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி, கல்லூரிகளில்

சமீப காலமாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்த சம்பவங்களும், புகார்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும், அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு சிறு வயதில் இருந்தே பெண் பிள்ளைகளிடம் ஏற்படுத்துவது அவசியம் ஆகிறது.

இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

மனம் விச்சு பேச வேண்டும்

வேலூரை சேர்ந்த மனநல மருத்துவர் ராதிகா தென்றல்அரசு:

நண்பர்கள், உறவினர்கள் யாராக இருந்தாலும் ஓரு எல்லைக் கோட்டுக்கு உட்பட்டு பழக வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளிடம் அன்பு காட்டி மனம் விட்டு பேச வேண்டும். அதேபோல குழந்தைகளும் பெற்றோரிடம் மனம் விட்டு பேச பழக்கப்படுத்த வேண்டும். பெரும்பாலும் பாலியல் பாதிப்பிற்கு உள்ளான குழந்தைகள் தனிமையில் இருக்க விரும்புவார்கள். அவர்களிடம் குறிப்பிட்ட சில மாற்றங்கள் ஏற்படும். அப்போது அவர்களிடம் வெளிப்படையாகப் பேசி தகவல்களைப் பெறவேண்டும். 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு கெட்ட தொடுதல் எவை என்பதை முன்கூட்டியே புரிய வைக்க வேண்டும். அப்போது துணிச்சலாக அது தவறு என்று கூறவும், தடுக்கவும் கற்றுத்தர வேண்டும். குழந்தைகள் தனிமையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பாலியல் தொந்தரவுகளால் ஏற்படும் மன அழுத்தம் உள்ள குழந்தைகள், ஆறு மடங்கு அளவு தற்கொலை எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள், என்று ஆராய்ச்சி மூலம் தெரிய வருகிறது. இவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தவிர்த்தால் மற்றவர்களைப் போல நல்ல வாழ்க்கை வாழமுடியும். இதற்காக அரசாங்கம் பல்வேறு வகைகளில் உதவிக்கரம் நீட்டி வருகிறது.

நேரம் ஒதுக்க வேண்டும்

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மனநலத்துறை தலைவர் டாக்டர் சிவலிங்கம்:- இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில் தாய், தந்தை என இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது கவனம் செலுத்தாததால் இது போன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன. அதுமட்டுமின்றி குழந்தைகள் செல்போன், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் வயதுக்கு மீறிய காட்சிகளை பார்ப்பதினால் சமூக நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் குறைந்து விடுகின்றன. இதனால் பாலியல் துஷ்பிரயோகம் சாதாரணமாக நடக்கின்றது. இதனை குறைக்க வேண்டும் என்றால் பெற்றோர்கள் குழந்தைகளின் மன நிலையை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். பள்ளிக்கு சென்று வரும் குழந்தைகளிடம் பள்ளியில் இன்று என்ன நடந்தது, குழந்தைகளின் நண்பர்கள் யார், இன்று யாரையெல்லாம் சந்தித்தார்கள் என்று பெற்றோர்கள் தினமும் மனவிட்டு பேச வேண்டும்.

குழந்தைகள் படிக்கும் போது பெற்றோர்கள் அவர்களுக்கு நேரம் ஒதுக்கி என்ன படிக்கிறார்கள், செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். இது பேன்று குழந்தைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். மேலும் சாதாரணமாக தொடுதலுக்கும், அபாச தொடுதலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை விளக்கமாக பேச வேண்டும். அப்போதுதான் வெளியில் ஏதேனும் தவறு நடந்தால் பெற்றோரிடம் கூறுவார்கள். இது குறித்த விழிப்புணர்வு இருந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் துஷ்பிரயோகத்தை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்கலாம்.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் டீன் திருமால்பாபு:-

மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் அதனை தங்களுக்குள்ளேயே மறைத்துக் கொள்ளாமல் பெற்றோர் அல்லது உறவினரிடம் தைரியமாக கூறினால் மட்டுமே அதற்கு தீர்வு காணப்படும். மாணவிகள் மீது பெற்றோர்கள் தனி கவனம் செலுத்தி அவர்களுடன் நட்பாக இருப்பதுடன், அவர்களுக்கு தைரியத்தை ஊட்ட வேண்டும். ஒரு சில பள்ளி மாணவர்கள் நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன், நான் வேலைக்கு செல்ல மாட்டேன் என கூறும் போது, அவர்களைப் பெற்றோர் கண்டிக்க மட்டுமே செய்கின்றனர். அவர்களுக்கு உள்ள பிரச்சினைகள் குறித்து யாரும் யோசிப்பதில்லை. பெண்களிடம் மாற்றம் வரும்பொழுது பெற்றோர்கள அதனை உன்னிப்பாக கவனித்து, அவர்களின் பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும். பிள்ளைகளுடன் பெற்றோர் நெருக்கமாக இருந்தால் மட்டுமே பெண் பிள்ளைகள் தைரியமாக எந்த ஒரு விஷயத்தையும் கூறுவார்கள். தங்களது பிரச்சினைகளை பிள்ளைகள் மீது திணிப்பதாலே, அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் பெற்றோரிடம் கூற தயங்குகின்றனர். பெண்கள் மனரீதியாகவோ அல்லது பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது, கட்டாயம் அவர்களிடம் மாற்றம் ஏற்பட்டிருக்கும். இதனை பெற்றோர்கள் கவனித்து அரசு மருத்துவமனைகளில் உள்ள மனநல மருத்துவர்களை அணுகி அதற்கு தீர்வு காண வேண்டும்.

திருப்பத்தூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.சரவணன்:-

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் சீண்டல்களை தடுக்க சிறு வயது முதலே நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் ஆகியவற்றை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுத்தர வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரிகளில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை தர வேண்டும். அரசும் இதற்கான தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். அனைத்து வகுப்பறைகள் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். பாலியல் தொந்தரவுகள் குறித்து உடனடியாக புகார் அளிக்க தயாராக இருக்க வேண்டும். ஹெல்ப் லைன் மூலமும் புகார் அளிக்கலாம் என்பதை மகளிர் போலீசார் மூலம் அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

செல்போன் காரணம்

அரக்கோணம் தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் கற்பக வல்லி:- இன்றைய காலத்தில் மாறி வரும் பழக்கவழக்கம், செல்போன் பயன்பாடு அதிகரிப்பு, அறிமுகம் இல்லாத நபர்களுடன் சமூக வலைதளங்கள் வாயிலாக புகைப்படம் போன்றவைகள் பகிர்வதின் விளைவாக பாலியல் ரீதியிலான குற்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் சைபர் குற்றங்களுக்கு ஆளாகின்றனர். கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் பாலியல் ரீதியிலான தொந்தரவு என தெரியவந்தால் பள்ளிகளில் மாணவர் மனசு என்று இருப்பது போன்று கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் தெரிவிக்கலாம். அதன் மீது உரிய விசாரனை நடத்தி நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், கல்லூரிகளில் போலீசார் போதிய விழிப்புணர்வுகள் ஏற்படுத்த வேண்டும், போலீஸ் தரப்பில் பாலியல் தொடர்பான தொலைபேசி புகார் எண் குறித்த விழிப்புணர்வு போன்றவை ஏற்படுத்த வேண்டும்.

ஓய்வுபெற்ற மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஜி.ராஜேந்திரன்:-

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாலியல் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் தொந்தரவு, பாலியல் பலாத்காரம் உள்ளிட்டவற்றுக்கு உள்ளாகின்றனர். பாலியல் தொடர்பான குற்றங்கள் முன்பு குறைவாக காணப்பட்டன. தற்போது அவை அதிகரித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் செல்போன்கள் தான். அனைவரது வீட்டிலும் ஸ்மார்ட் போன்கள் உள்ளன. செல்போனில் ஒரு திரைப்படம் அல்லது வீடியோ பார்க்கும்போது திடீரென பாலியல் உணர்வை தூண்டும் விதமான விளம்பரங்கள் ஒளிபரப்பாகின்றன. அதனை பார்க்கும் மாணவ-மாணவிகளின் மனதில் ஒருவித மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதிக நேரம் அவர்கள் செல்போன் வைத்திருக்க அனுமதிக்க கூடாது. போக்சோ வழக்குகளில் கைதாகும் நபர்களுக்கு கோர்ட்டில் விரைவில் தீர்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தண்டனையை கடுமையாக்க வேண்டும்

திருப்பத்தூரை சேர்ந்த உளவியல் நிபுணர் மற்றும் உதவி பேராசிரியர் ஜே.சுனில்:-

ஒவ்வொரு கல்வி நிலையங்களும் தங்களின் நிறுவனமானது எந்த ஒரு கெட்ட பெயரும் வாங்கக் கூடாது என்றுதான் அல்லும் பகலும் போராடி வருகின்றார்கள். காலத்திற்கு ஏற்றவாறு நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்காக சமூக வலையத்தளங்களை குற்றம் சொல்வதை விட நம் கல்வி நிறுவனங்களை பாலியல் முறைகேடுகளிலிருந்து எப்படி தவிர்ப்பது என்பற்கு அதிகமாக நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரம் உருவாகி இருக்கிறது.

பள்ளி கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கும் பாலியல் முறைகேடுகள் என்றால் என்ன என்பதை அந்தந்த கல்வி நிறுவனங்கள் தெரியப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தங்களுக்கு நடந்த முறைகேடுகளை பற்றி பேசுவதற்கான அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அது மட்டும் அல்லாமல் அவர்களுக்கான பிரைவசி ஏற்படுத்த வேண்டும். போக்சோ சட்டம் பற்றி தெளிவாக அனைவருக்கும் புரியும்படி பதிவு செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் குறைந்தது ஒரு உளவியல் ஆலோசகர் இருக்க வேண்டும். பாலியல் குற்ற புகார்களுக்காக ஏற்படுத்தப்பட்ட தொலைபேசி எண்ணையும், ஆசிரியருடைய பெயர்களையும் உளவியல் ஆசிரியரின் பெயரையும் அனைவரும் பார்க்கும்படி பொதுவான இடங்களில் வெளியிட வேண்டும்.

செய்யாறை சேர்ந்த கல்வியாளர் ஆதிகேசவன்:-

பள்ளி, கல்லூரிகளில் தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இதற்கென தனி சட்டம் இயற்றப்பட்டு அரபு நாடுகளில் வழங்கப்படுகின்ற தண்டனை போன்று கடுமையாக இருக்க வேண்டும். விசாரணை, பேச்சுவார்த்தை, தற்காலிக பணி நீக்கம் போன்ற தொடக்கநிலை தண்டனை தவிர்த்து, உயர்ந்த பட்ச தண்டனை வழங்கி எதிர்காலத்தில் எவரும் இது போன்ற இழிவான செயலில் ஈடுபடாமல் இருக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவிகளும், ஆசிரியர்களின் பாலியல் தொடர்பான பேச்சு, தொடுதல் மற்றும் பார்வை இவைகளை உணர்ந்து தள்ளி இருக்க வேண்டும். இது போன்ற செயலை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர், பெற்றோர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். நிர்வாகத்தில் உள்ளவரும் அலட்சியப் போக்கினை கடைபிடிக்காமல் யாராக இருந்தாலும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகள் விழிப்புடன் இருந்தால் இது போன்ற செயல்களை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்திடலாம். பள்ளி, கல்லூரி வளாகங்களில் பாலியல் சீண்டல் பற்றி மகளிர் காவல் நிலைய ஆலோசர்கள் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சமுதாய பொறுப்புடன் அனைவரும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து படிக்கும் மாணவிகளுக்கு துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story