வெப்ப அயற்சியால் கோழிகள் இறப்பை தடுப்பது எப்படி?


வெப்ப அயற்சியால் கோழிகள் இறப்பை தடுப்பது எப்படி?
x

வெப்ப அயற்சியால் கோழிகள் இறப்பை தடுப்பது எப்படி? என பண்ணையாளர்களுக்கு வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல்

104 டிகிரி வெயில்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 4 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும், அதிகபட்சமாக 104 டிகிரியாகவும் இருக்கும்.

காற்று மணிக்கு 4 கி.மீ.வேகத்தில் தெற்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 30 சதவீதமாகவும், அதிகபட்சமாக 55 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் வெப்பநிலை 102 டிகிரியை தாண்டும் என்பதால், கறவை மாடுகளை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மேய்ச்சலுக்கு உட்படுத்த வேண்டாம். பகலில் வெப்பம் உயர தொடங்கி இருப்பதால், முட்டை கோழிகளில் தீவனம் எடுப்பது குறைய தொடங்கி உள்ளது. இதனால் முட்டை உற்பத்தியும் குறையும் வாய்ப்பு உள்ளது.

வெப்ப அயற்சி

இதை தவிர்க்க தீவனத்தில் புரதத்தை சற்று உயர்த்தியும், எரிசக்தியை சற்று குறைத்தும் கொடுக்க வேண்டும். மேலும் தேவையான அளவில் அமினோ அமிலங்களை சேர்க்க வேண்டும். கடந்த வாரம் கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயற்சி நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்து இருப்பது தெரியவந்து உள்ளது.

எனவே பண்ணையாளர்கள் கோடைகால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும். கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க தெளிப்பான் உபயோகிக்க வேண்டும். தீவனத்தில் வைட்டமின்-சி, நுண்ணூட்டக்கலவை மற்றும் பீட்டைன் உபயோகிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story