ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கியவர்களை மீட்பது எப்படி?


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கியவர்களை மீட்பது எப்படி?
x
தினத்தந்தி 3 Aug 2023 1:00 AM IST (Updated: 3 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கில் மூழ்கியவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

தேசிய பேரிடர் மீட்பு படை

தென்மேற்கு பருவமழை காலத்தையொட்டி அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் ஆறுகள், அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மூழ்கியவர்களையும், மலைப் பகுதிகளிலும் பாதிப்பில் சிக்கியவர்களை மீட்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய பேரிடர் கால ஒத்திகைகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முதலைப்பண்ணை அருகே மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில் ஆபத்தில் சிக்கி கொள்பவர்களை மீட்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தேசிய பேரிடர் மீட்பு படை துணை கமாண்டர் வைத்தியலிங்கம் தலைமையிலான 22 வீரர்கள் அடங்கிய குழுவினர் ஒத்திகையை செய்து காட்டினர். இதில் வெள்ளப்பெருக்கு காலத்தில் ஆற்றின் நடுவே உள்ள தீவு பகுதிகள், ஆற்றின் மறுக்கரை உள்ளிட்ட இடங்களில் சிக்கியவர்களை மீட்பது, படகுகளின் மூலமும் மீட்பது குறித்து செயல்விளக்கம் செய்து காட்டினார்.

உபகரணங்கள்

இதேபோல் வெள்ளத்தில் அடித்து செல்பவர்களை மீட்பது குறித்தும், காவிரி ஆற்றில் மூழ்கியவர்களை பரிசலில் சென்று மீட்டு முதல் உதவி அளிப்பது, தண்ணீரில் ஆழமான பகுதியில் சிக்கியவர்களின் உடலை ஆக்சிஜன் உதவியுடன், ஆழ்கடல் நீச்சல் வீரர் மீட்கும் விதம் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த ஒத்திகைக்கு முன்பாக மீட்புப்பணிக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை, தீயணைப்புத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுமக்கள் உள்ளிட்ட அரசுத்துறையினர் கலந்து கொண்டனர்.


Next Story