தண்ணீரில் தத்தளிப்பவரை மீட்பது எப்படி?
தண்ணீரில் தத்தளிப்பவரை மீட்பது எப்படி? என்பது குறித்து கிணத்துக்கடவில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தத்ரூபமாக தீயணைப்பு வீரர்கள் நடித்து காண்பித்தனர்.
கிணத்துக்கடவு
தண்ணீரில் தத்தளிப்பவரை மீட்பது எப்படி? என்பது குறித்து கிணத்துக்கடவில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தத்ரூபமாக தீயணைப்பு வீரர்கள் நடித்து காண்பித்தனர்.
பேரிடர் மீட்பு ஒத்திகை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையொட்டி மழை வெள்ள சேதங்களை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தீயணைப்புதுறை சார்பில் கிணத்துக்கடவில் உள்ள கல்லுக்குழியில் பேரிடர் மீட்பு ஒத்திகை நடைபெற்றது. இதற்கு கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய அலுவலர் தங்கராஜ் தலைமை தாங்கினார். அப்போது கல்லுக்குழியில் ஒருவர் தத்தளிப்பது போன்றும், அவரை கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் தண்ணீரில் குதித்து பத்திரமாக மீட்பது போன்றும் தத்ரூபமாக நடித்து காண்பித்தனர். மேலும் பேரிடர் மீட்பு குறித்த பல்வேறு செயல்விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.
அச்சம் கொள்ளக்கூடாது
இதுகுறித்து தீயணைப்புத்துறையினர் கூறியதாவது:-
பருவமழை காலங்களில் ஏற்படும் மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து தப்பிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பேரிடர் மீட்பு ஒத்திகை நடைபெற்றது. வெள்ளத்தில் ஒருவர் சிக்கி கொண்டால் பொதுமக்கள் அச்சம் கொள்ளக்கூடாது. முதலில் கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு அவர்களை மீட்க முயற்சி செய்ய வேண்டும். லைப் ஜாக்கெட் பயன்படுத்தி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, கயிறு கட்டி மீட்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
மழை நேரத்தில் இடி மின்னல் ஏற்ப்படும்போது மரத்தின் கீழ் நிற்க கூடாது. தண்ணீர் அதிகமாக சென்றால் கையில் நீளமான குச்சிகளை கொண்டு ஆழத்தை தெரிந்து கொண்டு இறங்க வேண்டும். மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்க்கு தகவல் தெரிவிப்பது அவசியம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
----------------------