உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.
தூத்துக்குடியில் உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு மனிதசங்கிலி மற்றும் பேரணி நேற்று நடந்தது. அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் செவிலியர்கள் கைகோர்த்து அணிவகுத்து பங்கேற்றனர்.
கண் நீர் அழுத்த நோய்
கண் நீர் அழுத்த நோய் எந்த வித அறிகுறியும் இன்றி கண் பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடியது.
இந்த நோயை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த உலகம் முழுதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 12 முதல் 18 -வரை உலக கிளாக்கோமா வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த நோய் எந்த வயதினரையும் தாக்கக் கூடியதாகும். முக்கியமாக 40 வயதுக்கு மேற்பட்டோர் கண் பரிசோதனை செய்வது அவசியம் என்பதை வலியுறுத்தியும், கண் நீர் அழுத்த நோய் உள்ளோர் கண்டறியப்பட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மருத்துவ சிகிச்சை பெற்று பார்வை இழப்பை தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மனிதசங்கிலி
அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து மனிதசங்கிலி மற்றும் பேரணி நடத்தியது.
பேரணிக்கு மருத்துவக் கல்லூரி டீன் சிவகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. நிகழ்ச்சியில் மருத்துவக் கண்காணிப்பாளர் பத்மநாபன், துணை கண்காணிப்பாளர் குமரன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெபமணி, துறைத் தலைவர் பெரியநாயகி மற்றும் மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.