மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டி துறவியர் பேரவை மனித சங்கிலி - கொட்டும் மழையில் நடந்தது


மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டி துறவியர் பேரவை மனித சங்கிலி - கொட்டும் மழையில் நடந்தது
x

தமிழக துறவியர் பேரவை சார்பில் மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டி சென்னை சாந்தோம் தேவாலய வளாகத்தையொட்டிய பகுதிகளில் கொட்டும் மழையில் நனைந்தபடி துறவியர்கள், பாதிரியார்கள் மனித சங்கிலியில் பங்கேற்றனர்.

சென்னை

மணிப்பூர் மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டி, தமிழக துறவியர் பேரவை சார்பில் மனித சங்கிலி சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் சாந்தோம் தேவாலய வளாகத்தை ஒட்டிய பகுதிகளில் நேற்று நடந்தது. மனித சங்கிலியை சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தொடங்கிவைத்தார்.

இதில் தமிழக துறவியர் பேரவை மற்றும் அடைக்கல அன்னை சபைத் தலைவி மரிய பிலோமி, மூத்த வக்கீல் சேவியர் அருள்ராசு, திருச்சி சலேசிய சபையின் மாநில தலைவர் அகிலன், சென்னை சேசுசபையின் மாநில தலைவர் செபமாலை ராஜா, அடைக்கல அன்னை சபையில் மயிலாப்பூர் பள்ளிகளின் நிர்வாகி நேச சவுந்தரம், தமிழக துறவியர் பேரவை செயலாளர் நம்பிக்கை, சென்னை துறவியர் பேரவை தலைவர் செபமாலை உள்பட ஆண்-பெண் துறவியர்கள், பாதிரியார்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மனித சங்கிலி தொடங்கிய நேரத்தில் மழை கொட்டியது. ஆனாலும் இதில் பங்கேற்ற ஆண்-பெண் துறவியர்கள், பாதிரியார்கள் மழை பெய்தாலும், கலைந்து செல்லாமல், நனைந்தபடி மனித சங்கிலியில் ஈடுபட்டனர். அவ்வாறு மனித சங்கிலியில் ஈடுபட்டவர்கள் கையில் மணிப்பூரில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியபடி நின்றனர்.

அதனைத்தொடர்ந்து சாந்தோம் தேவாலய வளாகத்தில் மணிப்பூர் மாநில அமைதிக்கான கூட்டு பிரார்த்தனை நடந்தது. இந்த பிரார்த்தனையை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி நடத்தினார். அதன் பின்னர், கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்றவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி, மனிதமும், அன்பும் மணிப்பூரில் மலர்ந்திட சமூக நல்லிணக்க உறுதிமொழியை ஏற்றனர்.

முன்னதாக பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி நிருபர்களிடம் கூறுகையில், 'மணிப்பூரில் அரசியலுக்கு அப்பாற்பட்டு, நம்பிக்கை, அன்பை கட்டியெழுப்புவது மனிதநேயத்தின் கடமை ஆகும். இதற்காக கொட்டும் மழையிலும் துறவியர்கள் மனித சங்கிலியில் ஈடுபட்டனர். இந்தியா இறையாண்மை கொண்ட நாடு, அதில் அமைதி நிலவ, அனைவரும் ஒற்றுமையாக இருந்து அந்த மக்களுக்கு உதவ வேண்டும்' என்றார்.


Next Story