ஊட்டியில் மனுநீதி நாள் முகாம்: 73 பேருக்கு நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் அம்ரித் வழங்கினார்


ஊட்டியில் மனுநீதி நாள் முகாம்: 73 பேருக்கு நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் அம்ரித் வழங்கினார்
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:47 PM GMT)

ஊட்டியில் மனு நீதி நாள் முகாமில் 73 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

நீலகிரி

ஊட்டி

மனு நீதி நாள் முகாமில் 73 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

மனுநீதி நாள் முகாம்

நீலகிரி மாவட்டம், ஊட்டி வட்டம், சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஊரட்டி கிராம சமுதாய கூடத்தில் நேற்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதையடுத்து வருவாய்த்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.1.70 லட்சம் மதிப்பில் சாலை விபத்து நிவாரண உதவித்தொகை, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு ரூ.2.98 லட்சம் மதிப்பில் உதவித்தொகை, மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பில் புதிய குடும்ப அட்டைகள், தோட்டக்கலைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1.31 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய வேளாண் உபகரணங்கள், முன்னோடி வங்கி சார்பில் 10 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.15.32 லட்சம் மதிப்பில் வங்கி கடன் உதவி உள்பட மொத்தம் 73 பயனாளிகளுக்கு ரூ.28.45 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:-

54 மனுக்களுக்கு தீர்வு

மனுநீதி நாள் முகாமானது ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர், முதல்நிலை அலுவலர்களுடன் ஒவ்வொரு கிராமத்திலும் மாதத்திற்கு ஒருமுறை நடத்த கூடிய ஒரு நிகழ்ச்சியாகும். குறிப்பாக மக்கள் இருப்பிடத்திற்கே அரசு அலுவலர்கள் நேரிடையாக சென்று இதுபோன்ற முகாம்களை நடத்துவதனால், பொதுமக்கள் தங்களது குறைகள், கோரிக்கைகளை மனுக்களாக வழங்குவதன் மூலம் அதற்கான தீர்வு காண்பதற்கு எளிதாக இருக்கும். இந்த முகாமின் நோக்கமே மக்களை தேடி அரசு என்பதுதான். இந்த முகாமினை முன்னிட்டு ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து 102 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, இதில் 54 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, சோலூர் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கை திறந்து வைத்து பார்வையிட்டு, பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார்.

முகாமில் ஆர்.டி.ஓ. துரைசாமி, தோட்ட கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலாமேரி, உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) இப்ராகிம்ஷா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியராஜா, சோலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஹர்சத், ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயா, சோலூர் பேரூராட்சித் தலைவர் கவுரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story