திங்களூரில் மனுநீதிநாள் முகாம்: 199 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்- கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்
திங்களூரில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 199 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.
திங்களூரில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 199 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.
மனுநீதிநாள் முகாம்
பெருந்துறை அருகே உள்ள திங்களூரில் மனுநீதிநாள் முகாம் நடந்தது. முகாமில் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கலந்து கொண்டு 199 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 89 ஆயிரத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
மனுநீதி நாள் என்பது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நடத்தப்படுகிறது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை தீர்ப்பது தான் இம்முகாமின் முக்கிய நோக்கமாக உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டம்
முதல்-அமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளான வருகிற 15-ந் தேதி அன்று காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து இத்திட்டத்தினை ஈரோடு மாவட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தொடங்கி வைக்கிறார். தலா ரூ.1,000 உரிமைத்தொகை பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறினார்.
கோரிக்கை மனுக்கள்
தொடர்ந்து முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கிடும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டார்.
முகாமில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜகோபால், ஈரோடு ஆர்.டி.ஓ. பழனிகுமார் (பொறுப்பு), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரங்கநாதன், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்துறை) விஸ்வநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தாமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைச்செல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கோதை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதி, பெருந்துறை வருவாய் தாசில்தார் பூபதி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.