சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு மீதான மனித உரிமை மீறல் வழக்கு ரத்து- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு மீதான மனித உரிமை மீறல் வழக்கு ரத்து செய்யப்படுகிறது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன், ஏட்டு முருகன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த 2013-ம் ஆண்டு பணியில் இருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த கந்தவேல் மற்றும் அவரது வீட்டருகே வசிப்பவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு குறித்து புகார் செய்தனர். அந்த புகாரின் பேரில், கந்தவேல் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கந்தவேல் தனக்கு நெஞ்சுவலிப்பதாக கூறினார். அதைதொடர்ந்து உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள டாக்டரிடம் அவர் தகராறு செய்தார். அதன் பின்னர் அவர் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர், நாங்கள் மனிதஉரிமை மீறலில் ஈடுபட்டதாக கூறி ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு எங்கள் மீது தனிநபர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவரை கைது செய்யும்போது எந்த மனித உரிமை மீறலும் நடக்கவில்லை. எனவே ராமநாதபுரம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், எதிர்மனுதாரர் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது டாக்டரிடமும், போலீசாரிடமும் மிகவும் மோசமாக நடந்துள்ளார். இ.சி.ஜி. எடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்யும் போது, ஒத்துழைக்க மறுத்தால், போலீசார் தேவையான நடவடிக்கை எடுக்கலாம். அந்த அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோர் மீது ராமநாதபுரம் முதன்மை கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.