கடலூர் மத்திய சிறையில் மனித உரிமை மீறலா? கலெக்டர் திடீர் ஆய்வு


கடலூர் மத்திய சிறையில் மனித உரிமை மீறலா? கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 21 Sep 2023 6:45 PM GMT (Updated: 21 Sep 2023 6:45 PM GMT)

கடலூர் மத்திய சிறையில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதா? என்று கலெக்டர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

மனித உரிமை மீறல்?

கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 900-க்கு மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், தனி தாசில்தார் பலராமன், நேர்முக உதவியாளர் (பொது) ஜெகதீஸ்வரன் ஆகியோர் கடலூர் மத்திய சிறைச்சாலைக்கு நேற்று காலை 10.30 மணிக்கு திடீரென வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

கடலூர் மத்திய சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளுக்கு மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றதா?, சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றதா?, நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றதா? என்பது குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

மேலும் உணவு தயாரிக்கும் இடம் மற்றும் கைதிகளின் இருப்பிடங்கள் சுகாதாரமாக உள்ளதா?, முறையாக பேணி காக்கப்படுகிறதா? என்றும் அவர் பார்வையிட்டார். சிறைவாசிகளின் இன்னிசை பாடலை அவர் ரசித்து கேட்டார். இந்த ஆய்வு 11.40 மணி வரை நீடித்தது.

இதுவரை சப்-கலெக்டர்கள் மட்டுமே கடலூர் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மாவட்ட கலெக்டர், மத்திய சிறையில் ஆய்வு செய்வது இதுவே முதல்முறையாகும். கடலூர் மத்திய சிறையில் மனித உரிமை மீறல் நடப்பதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் கலெக்டரே நேரடியாக வந்து ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. ஆய்வின்போது சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் சிறை அதிகாரிகள் உடன் இருந்தனர். கலெக்டர் ஆய்வு செய்ததால் சிறைச்சாலை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story