தாமதமின்றி பட்டா வழங்கக்கோரி உண்ணாவிரதம்
பாபநாசம் அருகே விவசாயிகளுக்கு தாமதமின்றி பட்டா வழங்கக்கோரி உண்ணாவிரதம் நடந்தது. இதனால் தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
பாபநாசம்;
பாபநாசம் அருகே விவசாயிகளுக்கு தாமதமின்றி பட்டா வழங்கக்கோரி உண்ணாவிரதம் நடந்தது. இதனால் தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
உண்ணாவிரதம்
பாபநாசம் அருகே உள்ள அரையபுரம் தட்டுமால் படுகை விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசத்தில் உண்ணாவிரதத்தில்ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சாமு.தர்மராஜன் தலைமை தாங்கினாா். இந்திய கம்யூனிஸ்டு தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் பாரதி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். போராட்டத்தில் விவசாய சங்க ஒன்றிய தலைவர் பொய்யாமொழி, ஒன்றிய செயலாளர் கனகராஜ், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தில்லைவனம், ராஜேந்திரன், பரமசிவம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.
நிலப்பட்டா
பாபநாசம் தாலுகா அரையபுரம் தட்டுமால்படுகை கிராம விவசாயிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி ரயத்து வாரியாக மாற்றம் செய்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு காலதாமதமின்றி நிலப்பட்டா வழங்க வேண்டும்.பாபநாசம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசலாறு தென்கரையில் தடுப்பு சுவர் கட்டி தர வேண்டும். பாபநாசம் படுகை, சாலையை முனீஸ்வரன் கோவில் முதல் சுடுகாடு வரை தார் சாலையாக மாற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் நடைபெற்றது.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்தபாபநாசம் தாசில்தார் மதுசூதனன் உண்ணாவிரதம் இருந்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அடுத்த மாதம்(ஜூன்) 11-ந் தேதி(சனிக்கிழமை) நில அளவை துறை மாவட்ட உதவி இயக்குனரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தாசில்தாா் உறுதி அளித்தார்.இதன் பேரில் உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர். பேச்சுவார்த்தையின் போது பாபநாசம் வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் இருந்தனர்.